Tamilnadu

“மாட்டுக்கறி உண்டவர்களே இந்தியாவின் முதல் தீண்டத்தகாதவர்கள்” : ஆர்.எஸ்.எஸ் தலைவரின் விஷம பேச்சு!

பா.ஜ.க ஆட்சியில் அதிகரித்து வரும் தீண்டாமைக் கொடுமையை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், அதனை மறைமுகமாக வளர்க்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கும்பல் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறையையும் தீண்டாமைக் கொடுமைகளையும் வெளிப்படையாக அரங்கேற்றி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் முஸ்லிம் மக்கள் பற்றி விஷம கருத்துகளைப் பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் உருவாகியுள்ள தீண்டாமைக்கு இஸ்லாமிய மன்னர்களின் வருகையே முக்கியக் காரணம் என ஒரு கருத்தைக் கூறியுள்ளார் ஆர்.எஸ்.எஸ் இணைப் பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால் . அவரது இந்தக் கருத்து சிறுபான்மை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் இணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்து வரும் கிருஷ்ண கோபால் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “இந்தியாவில் முதல்முதலில் தீண்டத்தகாதகவர்கள் மாட்டு இறைச்சி உண்டவர்கள். இந்தத் தவறான செயலை மக்கள் அதிகம் செய்கிறார்கள்.

அதனால் ஒரு மிகப்பெரிய சமூகமே தீண்டத்தகாதவர்கள் என குத்தி ஒதுக்கி வைக்கப்படும் நிலை ஏற்படுகிறது. தீண்டாமைக்கு மாட்டுக்கறி உண்பதே காரணம்” என அவர் பேசியுள்ளார்.

மேலும், “முன்னதாக இந்தியாவில் தோன்றிய எந்தவொரு மதத்திலும் தீண்டாமை இல்லை; இஸ்லாமிய மன்னர்களின் வருகையே தீண்டாமைக்கு முக்கியக் காரணம். தற்போது வரை தீண்டாமை தொடர்ந்து வருகிறது” எனப் பேசியுள்ளார்.

அவரது இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எந்த ஒரு ஆதாரமும் இல்லாத தகவலை பரப்பி மக்கள் மத்தியில் மத ரீதியாக பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்பதாக பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.