Tamilnadu

சென்னையில் இன்று முதல் பேட்டரி பஸ் : விரைவில் தமிழகம் முழுவதும் அறிமுகம்? இதில் இருக்கும் வசதிகள் என்ன ?

எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் வகையிலும், காற்று மாசுபாடு ஏற்படுவதை தடுக்கும் வகையிலும் நாடு முழுவதும் மின்வாகனப் பயன்பாட்டை கொண்டுவர மத்திய அரசு படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில், மத்திய அரசின் ’ஃபேம் இந்தியா’ என்ற திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 5595 மின்சார பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக லண்டனைச் சேர்ந்த சி-40 என்ற முகமையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

இதனையடுத்து, முதற்கட்டமாக தமிழகத்தில் மின்சார பேருந்து சேவைக்கான சோதனை ஓட்டம் இன்று சென்னையில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை சென்ட்ரல் முதல் திருவான்மியூர் வரை மைலாப்பூர் வழியாக செல்லும் முதல் மின்சார பேருந்துக்கான சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டது. இரண்டு மின்கலன்கள் பொருத்தப்பட்ட பேருந்துக்கு ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 கிலோ மீட்டரும், 6 மின் கலன்கள் கொண்ட பேருந்துகளுக்கு ஒரு முறை சார்ஜ் செய்தால் 250-300 கி.மீ வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்சார பேருந்தில் தானியங்கி கதவுகள், வழித்தடங்களை தெரிந்துக்கொள்ளும் வகையில் ஜி.பி.எஸ் வசதிகள் உள்ளன. 32 இருக்கைகள் கொண்ட இந்த பேருந்தில் மின்கசிவு ஏற்பட்டால் தானே கண்டறிந்து சீர் செய்துக்கொள்ளும். இந்த பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.11 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.25 ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசோக் லேலாண்ட் நிறுவனம் தயாரித்துள்ள மின்சார பேருந்துகள், சோதனை ஓட்டத்தில் வெற்றிபெறும் பட்சத்தில் கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, தஞ்சாவூர், திருப்பூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் 525 பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.