Tamilnadu

பீதியைக் கிளப்பிய மர்ம பை... பரபரப்பான திருச்சி ரயில் நிலையம் - அல்வா கொடுத்த பயணி!

பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டும், பலத்த சோதனை மேற்கொண்டும் வருகின்றனர்.

அவ்வகையில், திருச்சி ரயில் நிலைய சந்திப்பிலும் ரயில்வே பாதுகாப்பு படையினர் மோப்ப நாய், பாம் டிடெக்டர் ஆகியவற்றைப் பயன்படுத்தி பல வகை சோதனைகளிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

ரயில் நிலையத்துக்குள் வரும் அனைத்து பயண்களின் உடமைகளையும் சோதித்த பிறகே உள்ளே அனுமதித்து வருகின்றனர். இந்த அளவுக்கு கெடுபிடிகள் போடப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது நடைமேடையின் தண்டவாளத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் பை ஒன்று கிடந்துள்ளது.

இதனைக் கண்ட ரயில் நிலைய ஊழியர்கள் உடனே பாதுகாப்புப் படையினரிடம் தெரிவிக்க, அவர்கள் வெடிகுண்டு நிபுணர்களை அழைத்து சோதனை மேற்கொண்டனர்.

வெடிகுண்டு ஏதும் இல்லை எனத் தெரிய வந்ததும், அந்தப் பையைத் திறந்து பார்த்தவர்களுக்கு அல்வாதான் கிடைத்துள்ளது. உண்மையிலேயே, அந்த பையில் ஒரு பொட்டலம் அல்வாவும், துணியும், ஓர் ஆதார் அட்டையுமே இருந்துள்ளது.

இதனையடுத்து, ஆதார் அட்டையில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, தஞ்சாவூரைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் பயணத்தின் போது பையைத் தவறவிட்டதாக தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளின் ஊடுருவல் செய்தியை அடுத்து, ரயில் நிலையத்தில் மர்ம பை கிடந்த சம்பவம் அங்கிருந்த மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்திய நிலையில், உண்மை தெரியவந்ததையடுத்து அச்சம் விலகியது.