Tamilnadu
நெல்லை : சாதி தலைவரின் பேனர் கிழிக்கப்பட்டதால் முன்விரோதம் - தலையை வெட்டி கொடூரமாகப் பழி தீர்த்த கும்பல்
நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையோரப் பகுதியான கருப்பந்துறையைச் சேர்ந்தவர் மணிகண்டன். கட்டிடத் தொழிலாளியான இவருக்கு முத்துமாரி என்கிற மனைவியும் 3 மாத கைக்குழந்தை ஒன்றும் உள்ளது.
நேற்றிரவு கருப்பந்துறையில் மணிகண்டன் தன்னுடன் வேலைப் பார்க்கும் இரு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர்கொண்ட மர்ம கும்பல், மணிகண்டனை நோக்கி வேகமாக வந்தது. வந்தவர்கள் தீடீரென மணிகண்டனை அரிவாளால் சரமாரியாக வெட்டத் தொடங்கினர்.
இதனால், மூவரும் சிதறி ஓடினர். விடாமல் துரத்திய கும்பலில் ஒருவன், மணிகண்டனை முதலில் காலில் வெட்டினான். ஓட முடியாமல் வலியில் துடித்த அவரை, மற்றொருவர் கழுத்தில் வெட்டியதில் மணிகண்டனின் தலை துண்டாகி விழுந்தது. ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மணிகண்டன் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால், கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை எடுக்க விட மாட்டோம் என மணிகண்டனின் உறவினர்களும், ஊர் மக்களும் மறியலில் ஈடுபட்டனர்.
நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் மணிகண்டனின் உடல் மீட்கப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் இரவு முழுவதும் கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர். கொலை செய்தவர்களை பிடிக்க 4 தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சாதித்தலைவருக்கு வைக்கப்பட்ட ப்ளக்ஸ் பேனர் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் இருபிரிவினரிடையே இருந்த முன்விரோதமே மணிகண்டன் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பதற்றமான சூழல் நிலவுவதால் கருப்பந்துறை பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Also Read
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!
-
முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!
-
“MISA தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா?” - விஜய்யைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வெகுண்டெழுந்த தி.மு.க!
-
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய்க்கு பயம் : காரணத்தை சொன்ன முரசொலி!