Tamilnadu

அன்று பால் விலை 1 ரூபாய் உயர்த்த வருந்திய கலைஞர்.. இன்றோ மக்களின் வயிற்றில் அடிக்கிறார் எடப்பாடி - சுப.வீ

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் சீத்தப்பட்டி காலணியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கொள்கை விளக்கக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்

அப்போது பேசிய அவர், '' திராவிட இயக்கத்தினுடைய கொள்கைகள் கோட்பாடுகள் இன்னும் அதிக அளவில் பரப்ப வேண்டும். தந்தை பெரியார் அவர்களுடைய வழித்தோன்றல் என்று சொல்லக்கூடிய லட்சக்கணக்கான தொண்டர்கள் வெவ்வேறு இயக்கமாக ஏன் இருக்கிறார்கள் என்பதற்கு பல்வேறு இயக்கங்களால் இருந்தால்தான் பரந்துபட்ட அளவில் பல்வேறு பணிகளைச் செய்ய முடியும் என்று தெரிவித்தார் .

மேலும், தற்போது இருக்கின்ற தமிழ்நாடு அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அவர் பட்டியலிட்டார். அரசு என்ற போர்வையிலே போலித்தனமாக தற்போது அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அரசை ஆட்டுவிப்பவர்கள் யார் என்று நமக்கு நன்றாகத் தெரியும்.

தற்போது தமிழக அரசினுடைய பால் விலையேற்றம் என்பது ஏழை எளிய மக்களை மிகவும் வாட்டுகின்ற ஒரு முடிவாகும். மேலும், இரண்டு ரூபாய் பால் கொள்முதல் விலையாக ஏற்றி , 6 ரூபாய் அளவிற்கு விலையை ஏற்றி மக்களிடம் விற்பனை செய்வது அன்றாடம் கூலி வேலை செய்கின்ற மக்களையும் பாலருந்தும் குழந்தைகளையும் மிகவும் பாதிப்படையச் செய்யும்.

தி.மு.க அரசில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த மதிவாணன், அப்போதைய முதல் அமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களை ஒரு ரூபாய் அளவிற்கு பால் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது, அப்போது இருந்த முதல்வர் கலைஞர் அவர்கள் பால் விலை, மற்றும் பேருந்து கட்டணம் நமது ஆட்சியில் ஏற்றப்படவே இல்லை.

ஒரு ரூபாய் பால் விலையேற்றம் என்பது ஏழை எளிய மக்களுக்கு மிகப் பெரிய சுமையாக இருக்கும் என்கின்ற கருத்து கொண்டிருந்தார். பல்வேறு அதிகாரிகள் மட்டத்தில் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி ஆவின் நிர்வாகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்திற்காக ஒரு ரூபாய் பால் விலை ஏற்றத்தை மிகுந்த மனவருத்தத்துடன் அறிவித்தார்.

ஆனால் இப்போது இருக்கின்ற மாநில அரசானது எந்தவிதமான கருத்துக்களுக்கும் இடமளிக்காமல் ஆறு ரூபாய் அளவிற்கு பால் விலையை ஏற்றி ஏழை மக்களின் வயிற்றில் அடித்து இருப்பது கண்டனத்திற்குரியது'' என குறிப்பிட்டார்.