Tamilnadu

சாக்லேட்டுக்கு மாற்றாக கடலை மிட்டாய் : சுதந்திர தினத்தை இயற்கை முறையில் கொண்டாடும் அதிசயப் பள்ளி !

இந்தியாவின் 73வது சுதந்திர தினம், தமிழகத்திலும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசப்பற்றை அடிப்படையாகக் கொண்டு மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் கலைத்திறன் போட்டிகள் நடத்தி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு சாக்லேட்டுக்கு பதிலாக கடலை மிட்டாயை வழங்கியுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், குடிசைத் தொழில் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், இயற்கை முறையில் கொண்டாட வேண்டியும் அந்நிய நாட்டு இனிப்பு வகைகளுக்கு பதிலாக நம் நாட்டு இனிப்பு வகைகளில் ஒன்றான கடலை மிட்டாயை பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று கடலை மிட்டாய் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் மலிவு விலை இனிப்புகளையே பல ஆண்டுகளாக வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.