Tamilnadu
"இஸ்லாமிய மக்களின் சாதனைகளிலும் சோதனைகளிலும் தி.மு.க துணை நிற்கும்" - மு.க.ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்து
“இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகத் திருநாளான பக்ரீத் நல்வாழ்த்துகளை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” என தி.மு.கழக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “தியாகம், அறம் , மனித நேயம், ஏழை எளியவர்கள் மீது பரிவு-கருணை உள்ளிட்ட உயர்ந்த நற்செயல்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இஸ்லாமியப் பெருமக்கள் 12.8.2019 அன்று பக்ரீத் என்ற தியாகத் திருநாளை கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஈத்-உல்-அஸா என்ற நோன்பு இருந்து "கடமையைச் செய்வதிலேயே உண்மையான இன்பம் பிறக்கிறது" என்பதை உணர்த்தும் நன்னாளாக இந்த நாள் அமைந்துள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது.
அனைத்து நாடுகளிலும் வாழும் இஸ்லாமியர்கள், புனித மக்கா நகருக்குச் செல்வது தங்கள் கடமை என்ற உணர்வில் இருக்கும் வேளையில், சில கெடுபிடிகளை விதித்து- அந்தப் புனிதப் பயணம் செல்வோருக்கு பல வித நெருக்கடிகளை உருவாக்குகின்ற இக்கட்டான சூழல் நிலவுவதை நாம் காண்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலிருந்த போதும், எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போதும் இஸ்லாமியப் பெருமக்களுக்குத் துணை நின்று அவர்களின் சாதனைகளிலும், சோதனைகளிலும் பங்கெடுத்து வருகிறது.
அந்த அடிப்படையில் இன்றைக்கு அரசியல் சட்ட ரீதியாக இஸ்லாமியப் பெருமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் நெருக்கடிக்குள்ளாகும் சூழ்நிலையிலும், அம்மக்களின் கருத்து அறியாமல் எதேச்சதிகாரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற இந்த நேரத்திலும், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் போல் உற்ற துணையாக நிற்கும் என்ற உறுதியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏழைகள் மீது காட்டும் கருணை தனி மனித வாழ்வில் ஒரு இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. அதுவே சமுதாய அளவில் மிகுந்த நல்லிணக்கத்திற்கு அடையாளமாக விளங்குகிறது. இந்தத் தியாகத் திருநாளில் சமுதாய நல்லிணக்கம் போற்றும் பணியின் சிறப்பம்சத்தை எடுத்துரைக்கும் வகையில் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தனது வாழ்த்து அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!