Tamilnadu

கீழடி அகழாய்வில் அழகு சாதன பொருட்கள் கண்டுபிடிப்பு : பண்டமாற்று முறையில் வணிகம் - அதிகாரிகள் தகவல்

மதுரை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிந்து, ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பத்து அடியில் குழிகள் பறித்து தொல்லியல் துறை ஆய்வுகளை நடத்தி வருகிறது.

இந்த அகழாய்வில் பண்டைய தமிழர்களின் கல்வியறிவை பறைசாற்றும் விதமான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட ஓர் எலும்பால் செய்யப்பட்ட எழுத்தாணி ஐந்தாம் கட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது பண்டமாற்று முறையின் மூலம் கீழடியில் வணிகம் நடைபெற்றிருக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதனை நிரூபிக்கும் வகையில் பெண் அழகு சாதன பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த பொருட்களைப் பார்க்கும் போது, குஜராத், மகராஷ்டிரா உள்ளிட்ட மாநில பெண்கள் பயன்படுத்தும் அகெய்ட் வகை அணிகலன்கள் போல் உள்ளது. இந்த அணிகலன் வியாபாரத்தில் கீழடி தனி சிறப்பைப் பெற்றிருக்கலாம். அந்த மக்கள் அணிகலன் சேமிக்கும் ஆர்வத்தில் இருந்திருக்ககூடும் என்று தோன்றுகிறது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உறை கிணறு கண்டறியப்பட்டது. 40 செ.மீ சுற்றளவு, 50 செ.மீ உயரம் கொண்ட நான்கு உறைகள் கொண்ட அடுக்காக, அந்த கிணறு அமைந்துள்ளது.

அகெய்ட் வகை அணிகலன்கள்

இதற்கு முன்னதாக நீளமான இரட்டைச் சுவர், பல்வேறு வடிவிலான பானைகள், வட்டவடிவிலான பெரிய தாழி உள்ளிட்டவை கிடைத்தள்ளன. இந்த ஐந்தாம் கட்ட அகழாய்வுகளில் 700க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முன்பு நடைபெற்ற ஆய்வுகளிலும் சேர்த்து இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வு பணிகள் இன்னும் 45 நாட்களுக்கு மேல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் இன்னும் கூடுதலாக பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம், பண்ட மாற்ற முறை மூலம் விற்பனை நடந்துள்ளதும், பெண்களின் அழகு சாதன பொருட்கள் வியாபாரத்தில் முக்கிய இடம் வகித்துள்ளதும் தெரியவந்துள்ளது. இன்னும் ஒன்றரை மாத காலம் அகழாய்வு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் மூலம் இன்னும் பல வியக்க வைக்கும் உண்மைத் தகவல்கள் வெளிவரலாம் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.