Tamilnadu

தமிழர்களைக் கிள்ளுக்கீரையாக நினைக்கும் மத்திய அரசு : ஹைட்ரோகார்பன் பணிகளைத் தொடங்க ஒப்புதல்!

தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் 3 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணியை தொடங்குவதற்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தின் 23 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 705 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதில் தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பணியைத் தொடங்க மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு பலமான எதிர்ப்பு நிலவி வருகிறது. தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். ஆனாலும், ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மத்திய அரசும், அதற்கு ஏவல் புரியும் மாநில அரசும் மும்முரம் காட்டி வருகின்றன.

பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான தலைமை இயக்குநர் இந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதன்படி காவிரி படுகையில், ஒஎன்ஜிசி-க்கு இரண்டு, ஐஒசி-க்கு ஒரு இடமும் வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “ஹைட்ரோ கார்பன் எடுக்கும் நிறுவனங்களுக்கு ஏதும் பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக பெட்ரோலிய அமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டும். தாமதப்படுத்தாமல் உடனடியாக பணியை தொடங்குவேண்டும்” எனவும் கூறியுள்ளார்.

தமிழர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தும், மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதில் வேகம் காட்டுவது, தங்களுக்கு வாக்களிக்காத தமிழக மக்களின் மீது விரோதத்தைக் காட்டுவதாகவே அமைந்துள்ளது.