Tamilnadu

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை... மற்ற பகுதிகளின் நிலை என்ன? - வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் புவியரசன் தெரிவித்ததாவது, தமிழகம், புதுச்சேரி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களான தேனி, கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாகவும், கடலோர மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாகவும் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவை ஒட்டிய பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கன்னியாகுமரி முதல் நீலகிரி வரை படிப்படியாக வருகிற வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்களில் கனமழை பெய்யும் எனவும் 12 முதல் 20 செ.மீ மழை பதிவாக வாய்ப்புள்ளது என வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடதமிழகம் முதல் தென் தமிழகம் வரையில் உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், வெப்பநிலை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.