Tamilnadu

வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா, இளவரசி பெயர் நீக்கம்.. போயஸ் இல்லம் அபகரிப்பு : ஊழ்வினையின் பயன் ?

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபணமானதால் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவுக்கும் அவரது உறவினரான இளவரசிக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் இருவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் சசிகலாவும், இளவரசியும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்ததால் அவர்களது வாக்காளர் அடையாள அட்டையில் போயஸ் இல்ல முகவரியே இடம்பெற்றிருந்தது. 2016ம் ஆண்டு தேர்தலின்போது கூட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியும் ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒன்றாக வாக்களித்தனர்.

இந்நிலையில் இருவரும் சிறை தண்டனை பெற்று சிறையில் இருப்பதால், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது போயஸ் தோட்ட இல்லத்தில் இல்லாததால் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

தற்போது ஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் சொத்துகளை ஆளும் தரப்பு அபகரிப்பதற்காக அதனை நினைவு இல்லமாக்க திட்டம் தீட்டி வருகிறது அ.தி.மு.க அரசு. மேலும், போயஸ் இல்லத்தில் ஜெயலலிதாவின் ரகசிய கோப்புகள் உள்ளதால் அதனை மறைப்பதற்காகவும் திட்டமிட்டு வருகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனையொட்டி, அங்கு எவரும் வசிக்காததால் போயஸ் தோட்ட முகவரியை கொண்டுள்ள சசிகலாவும், இளவரசியும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

இது சசிகலா உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒருகாலத்தில் அதிகாரத்தின் உச்சமாக இருந்த அந்த வீட்டில், தற்போது பேய் நடமாட்டம் உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சில பத்திரிகைகளில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.