Tamilnadu

உனக்கு வரையவே தெரியல.. சீட் தர முடியாது: கவின் கலைக் கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேடுகள் !

சென்னை எழும்பூரில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரியில் 2019-2020-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக கடந்த சனிக்கிழமையன்று நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். நுழைவுத் தேர்வின் மூலம் 110 பேர் சேர்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அதன்படி, கடந்த சனிக்கிழமை தேர்வு எழுதியோரில் சேர்க்கைக்கான பட்டியலை அடுத்த நாளே வெளியிட்டுள்ளது கல்லூரி நிர்வாகம். அந்தப் பட்டியலில் மிகத் திறமையான மாணவர்கள் நிராகரிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு அறிமுகமான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு எதன் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் எனவும், தேர்வு முடிந்த அடுத்தநாளே சேர்க்கை பட்டியலை வெளியிடவேண்டிய அவசியம் என்ன எனவும் நுழைவுத் தேர்வில் கலந்துகொண்ட மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே கவின் கலைக் கல்லூரி சேர்க்கையில் குளறுபடிகள் நடைபெறுவதாகவும், கல்லூரி நிர்வாகம் பணம் வாங்கிக்கொண்டு குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை தரவரிசைப்பட்டியலில் முன்னுக்கு கொண்டுவந்து குளறுபடிகள் செய்து வருவதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கவின் கலைக் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தனியாக பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகின்றனர். அவர்களது வகுப்பில் பயிலும் மாணவர்களை கல்லூரி சேர்க்கையில் அனுமதித்து, மற்ற மாணவர்களை திட்டமிட்டு வஞ்சிப்பதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சில ஆசிரியர்களின் லாபத்திற்காக, கல்லூரி நிர்வாகம் துணைபோவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திறமையான மாணவர்களுக்கு சேர்க்கை மறுக்கப்படுவது கல்லுரியின் தரத்தையும் பின்னோக்கி இழுத்துச் செல்லும் எனவும் மாணவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.