Tamilnadu

போலிஸ் வசம் இருந்தாலும் அவர் உயிருக்கு ஆபத்து உள்ளது : முகிலன் மனைவி பரபரப்பு பேட்டி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராக ஆதாரங்களை பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்ட நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு சென்றபோது சூழலியலாளர் முகிலன் காணாமல் போனார். இது தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.

4 மாதங்கள் ஆகியும் அவர் கண்டுபிடிக்க முடியாததால் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடரப்பட்டு, முகிலன் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வந்த நிலையில் நேற்றிரவு திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலனை ஆந்திர போலீசார் கைது செய்தனர். பின்னர் தமிழக சிபிசிஐடி போலீசாரிடம் முகிலன் ஒப்படைக்கப்பட்டார்.

சென்னை கொண்டு வரப்பட்ட முகிலனிடம் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். பிற்பகலில் முகிலன் மீது பாலியல் புகார் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முகிலனின் மனைவி பூங்கொடி, போராளி என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பவர் முகிலன். இவர்களே கடத்திச் சென்றுவிட்டு தற்போது கைது செய்ததாக நாடகமாடுகின்றனர் எனவும், உணவு, குடிநீர் எதுவும் கொடுக்காமல் முகிலனை சித்ரவதைச் செய்துள்ளனர் என்றும் அரசையும் போலீசாரையும் குற்றஞ்சாட்டினார்.

மேலும், முகிலன் கடத்தி வைக்கப்பட்ட இடம் எது என்று தெரியவில்லை என்றும், அவர் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறார் எனவும் பூங்கொடி தெரிவித்தார். கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளதால், அதில் முகிலன் பங்குபெறக் கூடாது என்பதற்காக அவர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

முகிலன் மீதான பாலியல் வழக்கு முற்றிலும் ஜோடிக்கப்பட்ட பொய் குற்றச்சாட்டு என தெரிவித்த பூங்கொடி, முகிலனை காண வந்தபோது எங்களுக்கு இன்று காலை நடந்த விபத்தும் திட்டமிட்ட சதி என்றும், நீதிபதி வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வழியில் முகிலனுக்கு என்ன வேண்டுமானாலும் நடைபெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.