Tamilnadu

நிலத்தடி நீரை வணிகமயமாக்கும் விவகாரம்: விசாரணை ஆணையரை நியமித்தது சென்னை உயர்நீதிமன்றம்!

விளைநிலங்களில் இருந்து நிலத்தடி நீரை மின்மோட்டார் மூலம் உறிஞ்சியும், வீட்டு உபயோகத்துக்கான குடிநீர் இணைப்பையும் வணிக நோக்கில் பயன்படுத்துவதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த இளையராஜாவும், நாகேஸ்வர ராவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

சென்னையில் நங்கநல்லூர், பழவந்தாங்கலிலும், தாம்பரத்தை அடுத்த கெளரிவாக்கத்திலும் இதுபோன்று குடிநீரை வணிக ரீதியில் இருமடங்கு கட்டணத்துக்கு விற்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் அடங்கிய அமர்வு குடிநீரும், நிலத்தடி நீரும் வணிக நோக்கில் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காஞ்சிபுரம் ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் எந்த அறிக்கையும் தாக்கல் செய்யாததால் மூத்த வழக்கறிஞர் சந்திரகுமாரை விசாரணை ஆணையராக நியமித்து உத்தரவிட்டனர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்ட ஆட்சியர்களும் விசாரணை ஆணையர் கேட்கும் விவரங்களை வழங்க வேண்டுமெனவும், அவ்வாறு அளிக்க மறுத்தால் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

இதுமட்டுமில்லாமல், சென்னை பெருநகர் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட லாரிகளின் விவரங்களை மேற்குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியர்களும், வர்த்தக பயன்பாட்டுக்காக நிலத்தடி நீரை எடுத்து வழங்குவதற்கு உரிமம் பெற்ற லாரிகளின் விவரங்களை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், அனைத்து தண்ணீர் லாரிகளையு உள்ளாட்சி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்வது கட்டாயம் என்று அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கும் உத்தரவிட்டு வழக்கு மீதான விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.