Tamilnadu

அரசு பணிக்காக இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில் விஏஓ பணிக்கு ஓய்வுபெற்றோர் நியமனம்!

தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு, 73 லட்சம் இளைஞர்கள் அரசு வேலைக்காக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ள நிலையில், காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்களில், 1000 ஓய்வுபெற்ற வி.ஏ.ஓக்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மொத்தமாக 12,616 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் உள்ள நிலையில் தற்போது 2,896 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்காக அரசு முறையாக தேர்வு நடத்துவதன் மூலம் தங்களுக்கு வேலை கிடைக்கும் என இளைஞர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்ப்பார்ப்புக்கு மாறாக, காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு ஓய்வுபெற்ற வி.ஏ.ஓக்கள் 1000 பேரை நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு நடத்தி காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக அரசு இவ்வாறு அறிவித்திருப்பது இளைஞர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.