Tamilnadu
பரங்கிமலை என்ன வட அமெரிக்காவில் இருக்கிறதா மிஸ்டர்.வேலுமணி?
இன்று செய்தியாளர்களிடம் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை; அது வெறும் வதந்தி” எனத் தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் மழை இல்லாவிட்டாலும் மக்களுக்கு தடையே இல்லாமல் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றும், இதனால் எந்த உணவு விடுதிகளும் மூடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்தப் பேச்சு தண்ணீருக்காக காலி குடங்களோடு அலையும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. வேறு வழியின்றி, பொதுமக்கள் மிக சிக்கனமாகத் தண்ணீரைப் பயன்படுத்தி வருகின்றனர்.
வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வருகின்றனர். சென்னையின் நெருக்கடியான மக்கள்தொகை காரணமாக தலைநகரம் கடுமையான நீர்ப் பற்றாக்குறையால் தத்தளிக்கிறது.
தண்ணீர் லாரிகளுக்காக இரவென்றும் பாராமல் மக்கள் விழித்திருக்கிறார்கள். தண்ணீர் பஞ்சத்தின் காரணமாக நகரத்தில் ஏராளமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. சென்னையின் ஐ.டி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்குத் தேவையான தண்ணீரை விநியோகிக்க வழியற்று, வீட்டிலிருந்தே பணி செய்ய (Work from home) உத்தரவிட்டுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கு அதிகளவில் தண்ணீர் பயன்பாடு தேவைப்படுவதால், பல நேரங்களில் ஏசி பயன்பாடும், எஸ்கலேட்டர் - லிஃப்ட் பயன்பாடும் தவிர்க்கப்பட்டுள்ளன. ஆனாலும், தண்ணீர் பற்றாக்குறை குறைந்தபாடில்லை.
இந்நிலையில், தற்போது பரங்கிமலை உள்ளிட்ட சில மெட்ரோ ரயில் நிலையங்களில் கழிப்பறை வசதியும் நிறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாததன் காரணமாக கழிப்பறை பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாக கைவிரித்துள்ளது மெட்ரோ. இதனால், பயணிகள் பலரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
நிலைமை கைமீறிப் போவதை உணராமல் அரசும், அமைச்சரும் மெத்தனமாக நடந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், நீரின்றித் தவிக்கும் மக்களை எரிச்சல்படுத்தும் வகையில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை என தெரிவித்திருப்பது மக்களை மேலும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?