Tamilnadu
இந்தி திணிப்பை கைவிட்டு, அவர்களுக்குத் தமிழ் பேச சொல்லிக்கொடுங்கள் : திருமாவளவன் எம்.பி !
ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் தமிழில் இருக்கக்கூடாது என தென்னக ரயில்வே உத்தரவிட்டது. தென்னக ரயில்வேயின் அந்த உத்தரவிற்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "தென்னக இரயில்வே துறையின் சார்பில் இரயில் நிலைய அதிகாரிகளுக்கிடையிலான தகவல் தொடர்புகள் குறித்து 12.06.2019 அன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையானது மொழியுரிமை உணர்வாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
இரயில் போக்குவரத்தை நெறிப்படுத்தும் கட்டுப்பாட்டாளர்கள், நிலைய கண்காணிப்பாளர்கள், மற்றும் நிலைய அலுவலர்கள் ஆகியோர் தங்களுக்கிடையே பணிகுறித்த தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும்போது, இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர பிராந்திய மொழிகளில் உரையாடல் செய்யக்கூடாதென ஆணையிடும் அறிக்கைதான் தென்னக இரயில்வேயின் அந்த சுற்றறிக்கையாகும். அதாவது, தமிழில் பேசக் கூடாது என்பதுதான் அதன் நோக்கமாகும்.
இந்தி மட்டுமே பேசத் தெரிந்த சில அதிகாரிகளுக்காகத் தமிழ்ப் பேசும் பெரும்பான்மையினரை இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி எழுத்துபூர்வமான சுற்றறிக்கையாகவே வெளியிட்டு தென்னக இரயில்வே நிர்வாகம் வற்புறுத்தியது. தமிழ் தெரியாதவர்களிடம் தமிழில் பேசினால் அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டு செயல்படும்நிலை ஏற்படலாமென்றும் அதனால் விபத்துகள் நேரும் வாய்ப்புகள் உருவாகுமென்றும் நிர்வாகம் அச்சப்படுவதில் தவறில்லை.
ஆனால், அதற்காகத் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளை மெல்ல மெல்ல அப்புறப்படுத்தும் ஆபத்தை வரவேற்க இயலுமா? காலப்போக்கில் இரயில்வே துறையில் இந்தி அல்லது ஆங்கிலம் படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்கிற நிலை உருவானால், தமிழர்களும் இந்தி கற்றாகவேண்டும் என்கிற கட்டாயம் உருவாகும். எனவே, இத்தகைய சுற்றறிக்கையை நிர்வாகம் தொடர்பானது என்று மட்டுமே இலகுவாக எடுத்துக்கொள்ள இயலாது.
ஒரே மொழியைப் பேசுவோரிடையிலும் புரிந்துகொள்ளுவதில் குழப்பம் ஏற்படுவதுண்டு. தகவல் பரிமாற்றம் என்பது ஒருவகை தனித்திறன். இது மொழியோடு மட்டுமே தொடர்புடையதல்ல. எனவே, இதில் நிர்வாகத்துக்கு உள்நோக்கம் இருப்பதை புரிந்துகொள்வது இன்றியமையாததாக உள்ளது.
இந்நிலையில் தி.மு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் மற்றும் அனைத்துத் தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புக் கிளம்பியதும் நிர்வாகம் பின்வாங்கியிருப்பதாகத் தெரிகிறது. இதனை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வரவேற்கும அதே வேளையில், தென்னக இரயில்வே நிர்வாகத்தின் இந்தப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறது.
அத்துடன் இனி வருங்காலத்தில் இத்தகைய முயற்சிகளைக் கைவிடவேண்டும் என்பதுடன், பிறமொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் வேலை செய்யும் இந்தி பேசுவோருக்குப் பிராந்திய மொழிகளைக் கற்றுத்தர அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல இந்தி பேசுவோர் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களில் வேலை செய்யும் பிறமொழி பேசுவோர் இந்தியைக் கற்றுக்கொள்வது இன்றியமையாததாகும். இந்த அணுகுமுறைகளின்றி இந்தியை மட்டுமே பிறமொழி பேசுவோர் மீது திணிக்கும் முயற்சியை முற்றிலும் கைவிடவேண்டுமென தென்னக இரயில்வே நிர்வாகமும் மைய அரசும் முன்வரவேண்டுமென விடுதலைச்சிறைத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது " இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
“இது என்ன, வாக்கரசியலுக்காக செய்வதா?” : ‘அன்புக்கரங்கள்’ திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் பதிலடி!
-
“IPL போல அதிமுகவில் APL போட்டி நடத்தலாம்” - அதிமுகவின் பல அணிகளை குறிப்பிட்டு துணை முதலமைச்சர் கிண்டல்!
-
“விஸ்வகுரு, விசுவாசம் இல்லாத குருவாகக் காட்டிக் கொண்டுவிட்டார்” - மோடியை விமர்சித்த முரசொலி தலையங்கம்!
-
“பள்ளி விடுமுறை நாட்களில்தான் கூட்டம் கூட்டுவார்..” - விஜய்க்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி!
-
“இதையெல்லாம் 50 வருடங்களாக பார்த்துவிட்டேன்..” - அவதூறு பரப்புபவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!