Tamilnadu
வாலிபர் சங்க நிர்வாகி படுகொலை : குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்திட வைகோ வலியுறுத்தல்!
நெல்லையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி ஆதிக்க சாதி வெறியர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலைக் குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “திருநெல்வேலி மாநகர், தச்சநல்லூர் பகுதி, கரையிருப்பு கிராமத்தைச் சேர்ந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞர் பிரிவான இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் அசோக் (24) கடந்த 12.06.2019 அன்று இரவு, பணி முடித்து ஊர் திரும்பும் வழியில் படுகொலை செய்யப்பட்டார் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இக்கொடிய செயலுக்கு மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
கரையிருப்பு கிராமத்தில் வசிக்கும் இரு பிரிவினரிடையே சில தினங்களாக முன்பகை இருந்ததாகவும், இது குறித்து ஓரிரு வழக்குகள் தச்சநல்லூர் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தப் புகார்களின் மீது காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ளத் தவறியதன் விளைவாகவே இப்படுகொலை நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
நெல்லை மாவட்டத்தில் தழைக்கத் தொடங்கியுள்ள சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து, மாவட்டத்தின் பொது அமைதிக்குக் கேடு விளைவித்து மீண்டும் சாதிய மோதலுக்கு வழிவகுக்கும் செயலாகவே இளைஞர் அசோக்கின் படுகொலை நிகழ்ந்துள்ளது. இந்தப் படுகொலையைச் செய்த குற்றவாளிகள் பொது அமைதிக்கும், சாதிய நல்லிணக்கத்திற்கும் கொடிய தீங்கு விளைவிப்பதால் அவர்கள் கடுமையான தண்டனைக்கு உரியவர்கள் ஆவார்கள்.
இளைஞர் அசோக்கின் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
படுகொலை செய்யப்பட்ட அசோக்கின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும் என்றும், இளைஞர் அசோக் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்து கூண்டில் நிறுத்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தமிழக அரசை மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளர்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!