Tamilnadu

தபால் ஓட்டு விவரங்களை தாக்கல் செய்க: தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணை

தமிழகத்தில் கடந்த ஏப்.,18ம் தேதி 38 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் தேர்தல் பணியில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், காவல்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டனர். ஆகையால் அவர்களுக்கு தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க வசதிகள் செய்யப்பட்டது.

தேர்தல் ஆணையத்தில் விதியில், தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்றும், ஒரு வாக்காளரின் வாக்கு கூட விடுபட்டு விடக்கூடாது என்றும் இருக்கும் நிலையில், தேர்தல் பணியில் அமர்த்தப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிப்பதற்காக 12,12ஏ ஆகிய விண்ணப்ப படிவம் வழங்கவில்லை. மேலும் சிறு சிறு காரணங்களுக்காகவும் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இருக்கையில், காவல்துறையினரின் தொன்னூறாயிரத்து இரண்டு தபால் வாக்குகள் பதிவாகியிருந்ததை வெளியிட்ட தேர்தல் ஆணையம், ஏன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தபால் வாக்குகள் குறித்த அறிக்கையை வெளியிடவில்லை என்று கேட்டு சென்னையைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சாந்தகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் மனுவில், ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் வாக்களிக்கவில்லை என குறிப்பிட்டு ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான செயல் தெரிய வந்திருக்கிறது. எனவே, தபால் வாக்களிக்க தவறிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விண்ணப்பப்படிவங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி வழங்க வேண்டும் என்றும், இதனை வாக்கு எண்ணிக்கைக்கு சேர்க்க உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த மனு, நீதிபதிகள் கிருஷ்ணன் ராமசாமி, சி.வி.கார்த்திகேயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அரசுக்கு எதிராக வாக்களிக்கக்கூடும் என்பதால் இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றஞ்சாட்டினர். இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எத்தனை விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்பட்டது, எத்தனை தபால் ஓட்டுகள் பதிவானது உள்ளிட்ட விவரங்களை மே 17ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.