Sports

ஓய்வை அறிவித்த Glenn Maxwell.. ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் அசைக்க முடியாத தூண்..!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தனது 38-வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக 14 ஆண்டுகள் விளையாடிய நிலையில், சரவதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து, டி20 ஃபிரான்சைஸ் (Franchise) கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட உள்ளதாக அறிவித்துள்ளார்.

2012-ம் ஆண்டு ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான மேக்ஸ்வெல், ஆஸ்திரேலிய அணிக்காக 149 ஒருநாள் போட்டிகளில் 3,990 ரன்களை குவித்துள்ளார். மேலும், 130 டி20 சர்வதேச போட்டிகளில் 2,897 ரன்களையும் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 201 ரன்களும், டி20 சர்வதேச போட்டிகளில் அதிகபட்சமாக 145 ரன்களும் தனி நபர் ரன்களும் பதிவு செய்துள்ளார். டி20 சர்வதேச போட்டிகளில் 5 சதங்கள் அடித்துள்ள அவர், இந்தச் சாதனையில் இந்திய வீரர் ரோஹித் சர்மாவுடன் இணைந்து உலக அளவில் முதலிடத்தில் உள்ளார்.

2015 மற்றும் 2023-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியிலும், 2021-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற அணியிலும் இவர் முக்கியப் பங்கு வகித்தார்.

குறிப்பாக 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல் ஆடிய அதிரடி ஆட்டம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் மறக்க முடியாத வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக அமைந்தது. அவருக்கு மட்டுமல்லாது உலக கிரிக்கெட் ரசிகர்களுக்குமே மேக்ஸ்வெல்லின் அன்றைய ஆட்டம் மறக்க முடியாததுதான்.

2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 292 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய ஆஸ்திரேலியா அணி, 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த ஆட்டத்தில் கடுமையான தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட மேக்ஸ்வெல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 128 பந்துகளில் 201 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார். இதனைப் பார்த்த ஒவ்வொரு ரசிகர்களுக்கும் அன்றைய போட்டி பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் தந்தது.

ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் அடித்த முதல் இரட்டைச் சதம் என்ற சாதனையையும் இந்த ஆட்டத்தின் மூலம் மேக்ஸ்வெல் படைத்தார்.

மேக்ஸ்வெல் 2013 முதல் 2017 வரை ஆஸ்திரேலிய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 14 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 339 ரன்கள் எடுத்த அவர், 26.07 சராசரியுடன் ஒரு சதம் மட்டும் அடித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக ராஞ்சியில் அடித்த 104 ரன்கள் அவரது அதிகபட்ச டெஸ்ட் ரன்களாக பதிவாகியுள்ளது. பந்துவீச்சில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 4 விக்கெட்டுக்கு 127 ரன்கள் கொடுத்ததாக அமைந்துள்ளது.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகள் என மூன்று வடிவங்களிலும் சேர்த்து ஆஸ்திரேலியாவுக்காக மேக்ஸ்வெல் 286 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். பேட்டிங்கில் 7,226 ரன்களும், பந்துவீச்சில் 136 விக்கெட்டுகளும் அவரது சாதனையாகும்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்கு மேக்ஸ்வெல் மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளார் என்றால் அது மிகையல்ல.

ஓய்வு குறித்து தெரிவித்துள்ள மேக்ஸ்வெல், “ஓய்வை அறிவிப்பது சற்று வருத்தமாகவும், அதே போல் தவிர்க்க முடியாத முடிவாகவும் இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும், விக்டோரியாவுக்கான 50 ஓவர் மற்றும் நான்கு நாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Also Read: அதிரடியாக ஜாகீர் கானை இறக்கிய சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் மைண்ட்.. இதுதான் ரகசியம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!