Sports
‘புது வடிவம் பெறும் உலகக்கோப்பை கிரிக்கெட்.. ஐபிஎல் போல் எலிமினேட்டர் சுற்றுகள்.. சுவாரசியமான விதிகள்!’
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), தனது ஆண்டு பொதுக்கூட்டத்தை நடத்தியது. இதில் ஆடவர் ஒருநாள் (ODI) உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை போட்டிகளின் வடிவமைப்பில் முக்கிய மாற்றங்களை செய்வதாக முடிவெடுத்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது.
போட்டிகளின் தரத்தை உயர்த்துதல், ஒவ்வொரு ஆட்டத்துக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளித்தல், போட்டித்தன்மையை அதிகரித்தல் மற்றும் ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் சிறந்த அனுபவத்தை வழங்குதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
2027 ஒருநாள் உலகக் கோப்பையில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கும். கடந்த இரண்டு உலகக் கோப்பை தொடர்களான 2019 மற்றும் 2023-ல் 10 அணிகள் மட்டுமே விளையாடிய நிலையில், மீண்டும் 14 அணிகள் இடம்பெறுவது 2015-க்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.
புதிய வடிவத்தில் போட்டி 4 கட்டங்களாக நடைபெறும் என கூறப்பட்டுள்ள நிலையில், முதல் சுற்று (Round 1) தரவரிசையில் 12, 13 மற்றும் 14-வது இடங்களில் உள்ள 3 அணிகள் மோதும். இதில் முதலிடம் பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இரண்டாம் சுற்று (Round 2) முதல் சுற்றில் தகுதி பெற்ற அணியுடன் சேர்த்து மொத்தம் 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக (ஒவ்வொன்றிலும் 6 அணிகள்) பிரிக்கப்பட்டு விளையாடும்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகளுடன், இரு பிரிவுகளிலும் அடுத்த சிறந்த அணியாக இருக்கும் மேலும் ஒரு அணி சேர்த்து மொத்தம் 7 அணிகள் 'சூப்பர் 7' சுற்றுக்குத் தகுதி பெறும்.
முன்னர் இருந்த 'சூப்பர் 6' முறைக்கு பதிலாக இனி 'சூப்பர் 7' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தகுதி பெறும் ஏழு அணிகளும் ஒன்றுக்கொன்று மோதும். இரண்டாம் சுற்றில் ஏற்கனவே நேருக்கு நேர் சந்தித்த அணிகளும் இந்த சுற்றில் மீண்டும் மோதும். உதாரணமாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரே பிரிவில் இருந்து சூப்பர் 7-க்கு முன்னேறினால், அவர்கள் மீண்டும் ஒருமுறை மோதுவார்கள்.
சூப்பர் 7 சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். முதல் இடம் பெற்ற அணி – நான்காவது இடம் பெற்ற அணியுடன் இரண்டாவது இடம் பெற்ற அணி – மூன்றாவது இடம் பெற்ற அணியுடன்
இந்த புதிய வடிவத்தால் 2027 உலகக் கோப்பையில் மொத்தம் 57 போட்டிகள் நடைபெறும். இது முந்தைய உலகக் கோப்பையை விட 9 போட்டிகள் அதிகமாகும்.
ஆடவர் டி20 உலகக் கோப்பையின் இரண்டாம் கட்டத்தில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 8-ல் இருந்து 10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வளர்ந்து வரும் கிரிக்கெட் நாடுகளுக்கு அடுத்த சுற்றை எட்டும் வாய்ப்பு அதிகரிக்கும்.
முதல் சுற்று: 20 அணிகள், தலா 4 அணிகள் கொண்ட 5 பிரிவுகளாக பிரிக்கப்படும். இதற்கு முன்பு 5 அணிகள் கொண்ட 4 பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு பிரிவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
முன்னர் இருந்த 'சூப்பர் 8' முறைக்கு பதிலாக இனி சூப்பர் 10 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தகுதி பெற்ற 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக (ஒவ்வொன்றிலும் 5 அணிகள்) பிரிக்கப்பட்டு விளையாடும். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடிக்கும் அணிகள், எதிர் பிரிவின் அணிகளுடன் ஐபிஎல் பாணியில் 'எலிமினேட்டர்' போட்டிகளில் மோதும். இந்த இரண்டு எலிமினேட்டர் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அதன் பின்னர் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும்.
2028 டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று முறையிலும் ஐசிசி மாற்றங்களை அறிவித்துள்ளது. 2026 டி20 உலகக் கோப்பையில் இறுதி நேரத்தில் வங்கதேசத்தை மாற்றி இடம்பிடித்த ஸ்காட்லாந்து, 2028 தொடருக்கான ஐரோப்பிய பிராந்திய இறுதிச் சுற்றுக்கு நேரடியாக தகுதிபெறும்.
2026 உலகக் கோப்பையில் விளையாடியிருந்தாலும், 2028 தொடருக்கு தானாக தகுதி பெறாத அணிகள் குளோபல் குவாலிபையர் (Global Qualifier) சுற்றில் பங்கேற்க வேண்டும்.
அதற்கான மீதமுள்ள எட்டு இடங்கள் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியா–பசிபிக் ஆகிய ஐந்து பிராந்தியங்களின் தகுதிச் சுற்றுகள் மூலம் நிரப்பப்படும்.
ஒவ்வொரு பிராந்தியத்திலும் முதலிடம் பெறும் அணியுடன், அடுத்த சிறந்த மூன்று அணிகளும் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும். ஏற்கனவே நேரடியாக தகுதி பெற்றுள்ள 12 அணிகளுடன் சேர்த்து மொத்தம் 20 அணிகள் 2028 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும்.
இந்த மாற்றங்களுக்கு ஐசிசியின் மேம்பாட்டு மற்றும் தலைமை நிர்வாகிகள் குழு பரிந்துரை வழங்கியுள்ளது. ஆண்டு பொதுக்கூட்டத்தில் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், ஐசிசி நிதி மற்றும் வர்த்தக விவகாரங்கள் குழு வரும் நவம்பர் மாதத்தில் மேற்கொள்ளும் இறுதி ஆய்வுக்குப் பிறகே, இந்தப் புதிய போட்டி வடிவங்கள் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி : விமர்சனம் செய்தவரை இரவோடு இரவாக கைது செய்த தவெக போலீஸ்!
-
ரூ. 1.30 லட்சம் லஞ்சம்.. வைரலான வீடியோ.. திசை திருப்பிய தவெக.. பின்னர் கைது நடவடிக்கை! - என்ன நடந்தது?
-
2 பவுன் சங்கிலி பறிப்பு.. காவல் நிலையம் முன்பே நடந்த சம்பவம்.. தவெக நிர்வாகி செயலை கண்டுகொள்ளாத போலீஸ்!
-
மிரட்டிய அர்ஜெண்டினா.. ஆட்டத்தின் போக்கை மாற்றிய மெஸ்ஸி.. இங்கிலாந்துக்கு நடந்த அதிர்ச்சி!
-
ஒரு மாத தவணை கட்ட தாமதம்.. வீடு புகுந்த வங்கி ஊழியர்கள்.. வீடியோ வெளியிட்டு விவசாயி எடுத்த விபரீத முடிவு!