Sports
CSK-விலிருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகல்.. பிரிந்த 18 ஆண்டுகால கூட்டணி.. அடுத்த பயிற்சியாளர் யார்?
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீபன் பிளெமிங், கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் சிஎஸ்கே அணியின் வீரராக இணைந்தார். பின்னர் 2009ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார்.
17 ஆண்டுகால அவரது பயிற்சியின் கீழ் சிஎஸ்கே அணி 5 முறை ஐபிஎல் கோப்பைகளையும், 2 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்று சாதனை படைத்தது.
மேலும் சிஎஸ்கே அணி 12 முறை பிளே-ஆஃப் சுற்றுகளுக்கும், 10 முறை இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளராக இருந்தார் பிளெமிங்.
ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. மேலும், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து பெரும் சரிவை சந்தித்தது. இதை அடுத்து பிளெமிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக சிஎஸ்கே அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை எனவும், வீரர்கள் தேர்விலும் மிகப்பெரிய ஓட்டை இருப்பதாக கடும் விமர்சனங்கள் பிளெமிங் மீது இருந்து வந்தது. ரசிகர்களும், நீண்ட காலமாக பிளெமிங் சிஎஸ்கே அணியுடன் பயணித்திருந்தாலும் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப அணியை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பாரம்பரியம் என்ற பெயரில் ஒரே மாதிரியான வழிமுறைகளை நாம் கடைபிடிக்க முடியாது. அப்டேட் ஆக வேண்டிய சூழ்நிலையில் அணியின் நிலைமை உள்ளது. அதனை நிர்வாகம் பரீசீலிக்க வேண்டும் என பல்வேறு விவாதங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விவாதித்து வந்தனர்.
இதுகுறித்து அணியின் நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதனும் தெரிவிக்கையில், அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் தகுந்த நடவடிக்கையை எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வோம் என கூறியிருந்தார்.
2026 ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு பல்வேறு சீரமைப்புகள் அணியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் வெளிப்பாடாகவே இந்த மாற்றத்தை பார்க்க வேண்டியுள்ளது. ஏற்கனவே வீரர்களை டிரேட் செய்யும் பணியில் இறங்கியுள்ளதாக சிஎஸ்கே அணி வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது.
தற்போது புது தலைவலியாக பிளெமிங் சென்று விட்டார். அடுத்தது தலைமைப் பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி, சிஎஸ்கே முன்னாள் வீரரும், நியூசிலாந்து முன்னாள் அதிரடி வீரருமான பிரெண்டன் மெக்கலம் பெயரும் அடிபட்டு வருகிறது. இதில் ரசிகர்களின் விருப்பத் தேர்வாக மெக்கலம் இருந்தாலும், சிஎஸ்கே முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஸ் ரெய்னாவை அணிக்குள் கொண்டுவர வேண்டும். அவரின் அனுபவங்கள் வீரர்களுக்கு கைகொடுக்கும் என்ற பேச்சு எழுந்துள்ளது.
இதுபோன்ற பல்வேறு புயல்கள் சிஎஸ்கே அணியினை சுற்றி சுழலத் தொடங்கியுள்ள நிலையில், தோனியின் ஓய்வு, அடுத்த டிரேட், பயிற்சியாளர் என பல்வேறு வேலைகள் இருந்தாலும். 2027 ஐபிஎல் தொடருக்கு இன்னும் 10 மாதங்கள் இருப்பதால் விரைவில் நல்ல முடிவை சிஎஸ்கே நிர்வாகம் எடுக்கும் என ரசிகர்கள் நம்பிக்கியுடன் காத்திருக்கின்றனர்.
Also Read
-
விஜய் இனியும் கீழ்த்தரமாகப் பேசினால்... : ஆர்.எஸ்.பாரதி விடுத்துள்ள எச்சரிக்கை என்ன?
-
தமிழின் எந்த அகராதியிலும் பதிவாகாத... : பூமணி மறைவுக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
சாதி பெயரை கூறி இழிவு செய்யப்பட்ட Delivery Boy : புகார் கொடுக்க சென்ற இளைஞரை தாக்கிய போலீஸ்!
-
மதுரை அருகே அதிகாலையில் நடந்த பயங்கரம் : நேருக்கு நேர் மோதிக் கொண்ட பேருந்துகள் - 6 பேர் பலி!
-
கரூர் கொடுந்துயரம் : சாட்சிகளை அச்சுறுத்தும் விஜய் - உச்சநீதிமன்ற கண்காணிப்புக் குழுவிடம் தி.மு.க. மனு!