Sports

ஆஸ்திரேலியா டென்னிஸ் 2026 : 2-ம் இடம் வென்ற மாற்றுத்திறன் வீரர் ப்ரித்வி சேகருக்கு துணை முதல்வர் வாழ்த்து

முதலமைச்சர் அவர்கள் விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கி வருகின்றார். விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு அளித்து பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்து வருகின்றார். 

தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை வழங்கும் (Elite) திட்டத்தின்கீழ் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத் தொகை 25 இலட்சம் ரூபாயை 30 இலட்சம் ரூபாயாக உயர்த்தியதோடு இத்திட்டத்தில் பயன் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை 12 லிருந்து 50 ஆக உயர்த்தியுள்ளார். 

மேலும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் பெறுவதற்கான ஊக்குவிப்பு (MIMS) திட்டத்தின் கீழ் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்து நிதியுதவியை 10 இலட்சம் ரூபாயிலிருந்து இருந்து 12 இலட்சம் ரூபாயாக உயர்த்தியதோடு, தற்போது பயன்பெறும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கையை 125 ஆக உயர்த்தியுள்ளார். 

அதேபோல் சாம்பியன் டெவலப்மெண்ட் திட்டத்தின் (CDS) கீழ் பயன்பெறும் வயதிற்குட்பட்டோர் பிரிவு விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கையை 100 லிருந்து 200 ஆக உயர்த்தியுள்ளார்.  

மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளவும், வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி பெறவும், அதிநவீன உயர்தர விளையாட்டு உபகரணங்களை வாங்கவும், தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையை உருவாக்கி நிதியுதவி அளித்து வருவதுடன், அவர்கள் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றால் உயரிய ஊக்கத்தொகையையும்  வழங்கி வருகின்றார்.

இதன் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்று சாதனை படைத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.  

தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை வழங்கும் (Elite) திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டு பயன்பெற்று வரும் மாற்றுத்திறனாளி டென்னிஸ் வீரர் திரு. ப்ரித்வி சேகர் அவர்கள் ஆஸ்திரேலியா நாட்டின் மெல்பேர்ன் நகரில் கடந்த 30.1.2026 முதல் 1.2.2026 வரை நடைபெற்ற செவித்திறன் குறைபாடுடையோருக்கான ஆஸ்திரேலியா டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்று, இரண்டாம் இடத்தை பிடித்தார். மேலும், செவித்திறன் குறைபாடுடையோருக்கான ஆஸ்திரேலியா டென்னிஸ் 2026 ஆடவர் இரட்டையர் பிரிவில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த கபோர் மாதேவுடன் (GOBOR MATHE) இணைந்து விளையாடி இரட்டையர் பிரிவிலும் இரண்டாம் இடம் பிடித்தார். 

இவர் கடந்த 2024, 2025 ஆம் ஆண்டுகளில் செவித்திறன் குறைபாடுடையோருக்கான ஆஸ்திரேலியா டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை இன்று (9.2.2026) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எலைட் திட்ட (Elite Sportsperson Scheme) வீரர் திரு.ப்ரித்வி சேகர் அவர்கள் சந்தித்து, செவித்திறன் குறைபாடுடையோருக்கான ஆஸ்திரேலியா டென்னிஸ் 2026 ஆடவர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் இரண்டாம் இடம் வென்றதற்கான பரிசுக் கோப்பைகளை காண்பித்து வாழ்த்து பெற்றார்.             

Also Read: நரிக்குறவர் பிரிவு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா... அமைச்சர் மா.சு. வழங்கினார்!