Sports

டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா! அபிஷேக் சர்மாவின் அதிவேக சதம்... புரட்டி எடுக்கப்பட்ட நியூசிலாந்து!

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 48 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து ராய்ப்பூரில் நடந்த 2-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது.

இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3வது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நடந்தது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், தொடரை இழக்காமல் இருக்க நியூசிலாந்து அணியும் கடுமையாக போராடியதால் ஆட்டத்தின் தொடக்கம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனைத்தொடர்ந்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே 1 ரன்களுக்கும் , டிம் சீபராட் 12 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தது.

நிலைமையை உணர்ந்த கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன் பொறுப்புடன் நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். இருவரும் பொறுமையாக ஆடிவந்த நிலையில், கிளென் பிலிப்ஸ் 48 ரன்னிலும், மார்க் சாப்மேன் 32 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனை தொடர்ந்து வந்த மற்ற வீரர்களும் இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 153 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணி சார்பில் பும்ரா 3 விக்கெட்டுகள், ஹர்திக் பாண்டியா, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து வந்த இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா இணை அதிரடியாக ஆடி அணியை மீட்டனர். வெளுத்து வாங்கிய இஷான் கிஷன் 13 பந்துகளில் 28 ரன்களுடன் அவுட்டாகி வெளியேறினார்.

தொடர்ந்து களத்தில் இருந்த அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி நியூசிலாந்து அணியின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். அபிஷேக் சர்மா 14 பந்தில் அரைசதமும், 20 பந்துகளில் 68 ரன்களும் அடித்து அசத்தினார். இதன்மூலம் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் அபிஷேக் சர்மா 2வது இடம் பிடித்துள்ளார்.

மறுபுறம் சூர்யகுமார் யாதவ் பந்துகளை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்க விட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியதுடன் 57 ரன்களை குவித்தார்.

இறுதியில் இந்திய அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

155 ரன்கள் இலக்கை 10 ஓவர்களில் எட்டியதுடன், 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.

ஒருநாள் தொடரை இழந்த நிலையிலும், டி20 தொடரை கைப்பற்றி ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது இந்திய அணி. வரும் பிப்ரவரி மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் அசுர பார்ம் உலகக்கோப்பையில் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: இந்தியா - நியூசிலாந்து முதல் T20 : அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்ற இந்தியா - முழு விவரம் உள்ளே!