Sports
5-வது இடத்தில் இறங்கி ஆடிய KL ராகுல்… கொண்டாடிய ரசிகர்கள்... காரணம் என்ன?
நியூசிலாந்து மற்றும் இந்தியா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 2 வது ஒருநாள் போட்டி நேற்று (ஜன. 14) குஜராத் மாநிலத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்தது. பின்னர் 285 என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 47 வது ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் நடைபெற்ற ஒரு நிகழ்வை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர். முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் 5வது வீரராக கே.எல். ராகுல் களமிறங்கினார். இவர் 11 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 92 பந்துகளில் 112 ரன்கள் அடித்து அசத்தினார். இவரது அதிரடி ஆட்டம் தற்போது கவனம் பெற்றுள்ளது.
தனக்கு பிடித்தமான அவரது இடத்தில் இறங்கி, கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி அதிரடியாக ஆடிய கே.எல் ராகுலுக்கு இந்திய அணியில் இன்னும் நிரந்தரமாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதே கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்நிலையில், நீளமான தலைமுடியுடன் விக்கெட் கீப்பர், பேட்டராக செயல்பட்டு அணியின் நலனை கருத்தில் கொண்டு எந்த வரிசையில் வேண்டுமானாலும் அதிரடியாக ஆடும் திறமையையுடைய கே.எல்.ராகுலின் ஆட்டம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை நினைவூட்டுவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதேபோல், தோனியும் 5,6 மற்றும் 7வது வரிசையில் பேட்டிங் இறங்கி இந்திய அணியின் வெற்றிக்கு உதவுவார். தொடர்ந்து தனது பேட்டிங் மற்றும் கீப்பிங் திறமையால் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார். அவரை போன்றே தற்போதும் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி வருவதாக ஒப்பிட்டு ரசிகர்கள் நெகிழ்ச்சியாக பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த 2023 ஒருநாள் போட்டி உலககோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 97 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார் கே.எல்.ராகுல். அதேபோல், உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது 5வது பேட்ஸ்மேனாக இறங்கி 66 ரன்கள் எடுத்தார். இந்த இருபோட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவினாலும், கே.எல்.ராகுலின் ஆட்டம் முக்கியம் வாய்ந்தது என்பதை மறுக்க முடியாது.
மேலும், ஒரு நிரந்தரமான இடத்தில் கே.எல். ராகுலை ஆட வைப்பது இந்திய அணிக்கும் நன்மை பயக்கும். ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் என மாறி மாறி அணியில் இடம் பிடிப்பதால். அந்த இடத்தில் ஒரு வீரரை இன்னும் நிரந்தரமாக தேர்வு செய்யாமல் தடுமாறி வருகிறதா வீரர்கள் தேர்வுக்குழு என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கே.எல்.ராகுல் போன்ற ஒரு திறமையான பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் எந்த வரிசையிலும் இறங்கி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் பட்சத்தில் தேர்வுக்குழு சரியான முடிவெடுக்க வேண்டிய நேரம் இதுதான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
Also Read
-
6 நாட்களில் 1,500 டன் கழிவுகள்... தமிழ்நாடு முழுவதும் SIPCOT தொழிற்பூங்காக்களிலில் மாபெரும் தூய்மைப் பணி!
-
கோலகலமாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... முதல் 3 பரிசுகளை வென்றது யார்? என்ன? - விவரம் உள்ளே!
-
‘டால்பின்’ அன்புமணி.. வெளியேற தயாரா?.. - அன்புமணியை அறிக்கை மூலம் விளாசிய அமைச்சர் MRK பன்னீர்செல்வம்!
-
வடகிழக்குப் பருவமழை, புயல்... விவசாயிகளுக்கு ரூ.111.96 கோடி நிவாரணத்தொகை.. அரசாணை வெளியீடு!
-
“பொங்கல் விழாவை கலை மற்றும் குறள் விழாக் காலமாக மாற்றியுள்ளார் முதலமைச்சர்...” - முரசொலி புகழாரம்!