Sports
ஐசிசி தரவரிசைப் பட்டியல்… 5 ஆண்டுகளுக்கு பிறகு ‘நம்பர் 1’ இடத்தில் விராட் கோலி! : முழு விவரம் உள்ளே!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), ஆடவர்களுக்கான ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று (ஜன. 14) வெளியிட்டுள்ளது.
ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் தரவரிசைப் பட்டியலை பொறுத்தளவில் இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேனான விராட் கோலி 785 புள்ளிகள் பெற்று, 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
2021ம் ஆண்டு ஜூலைக்குப் பின் முதல்முறையாக ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார் விராட் கோலி. இந்த தரவரிசைப்பட்டியலில் முதல் இடம் பிடிப்பது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இது 11வது முறையாகும்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கோலி, அக்டோபர் 2013-ல் முதன்முதலாக ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார். குறிப்பாக, 2017 - 2020 வரையிலான காலத்தில் தொடர்ந்து 825 நாட்கள் ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த சாதனையும் விராட் கோலியின் கைவசமே உள்ளது. இது ஒரு இந்திய பேட்ஸ்மேன் ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அதிகபட்ச காலமாகும்.
அவ்வரிசையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில், 784 புள்ளிகளுடன் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் 2வது இடத்தில் உள்ளார். 3வது இடத்தில் 775 புள்ளிகளுடன் இந்திய வீரர் ரோஹித் சர்மா உள்ளார். இந்திய வீரரான கே.எல். ராகுல் ஒரு இடம் முன்னேறி தற்போது 11-வது இடத்தை பிடித்து அதிரடி காட்டியுள்ளார்.
ஐசிசி ஆடவர் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், இங்கிலாந்தின் ஜோ ரூட் 880 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹாரி புரூக் 857 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.
ஆஷஸ் தொடரின் இறுதி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்ததன் மூலம் ஆஸ்திரேலிய வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தலா ஒரு இடம் முன்னேறி 3வது மற்றும் 4வது இடங்களை ஜோடியாக பிடித்துள்ளனர்.
ஐசிசி ஆடவர் டி20 பேட்ஸ்மேன் பட்டியலில் 908 புள்ளிகளுடன் இந்திய அணி இளம் வீரரான அபிஷேக் சர்மா முதல் இடத்தில் உள்ளார். 2வது இடத்தில் இங்கிலாந்து வீரர் பில் சால்ட் மற்றும் 3வது இடத்தில் இந்திய வீரர் திலக் வர்மா ஆகியோர் அடுத்தடுத்து இடம் பிடித்துள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் பட்டியல்
ஐசிசி டெஸ்ட் போட்டிகளின் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலை பொறுத்தளவில் 879 புள்ளிகளுடன் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதல் இடத்தை கைப்பற்றியுள்ளார்.
2வது இடத்தில் 843 புள்ளிகளுடன் பாகிஸ்தான் வீரர் நோமன் அலி மற்றும் 3 வது இடத்தில் 838 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் உள்ளனர்.
ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் 710 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். 2வது இடத்தில் இங்கிலாந்து வீரர் 670 புள்ளிகளுடன் ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் 3வது இடத்தில் 649 புள்ளிகளுடன் குல்தீப் யாதவ் ஆகியோர் உள்ளனர்.
டி20 பந்துவீச்சாளர்களின் பட்டியலை இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 804 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்து மிரட்டியுள்ளார்.
இந்த பட்டியலில் 702 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
4,184 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை!
-
288 Iconic Projects : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்!
-
கம்பீரின் ஆதரவால் அணிக்குள் வந்தாரா ஆயுஷ் பதோனி? - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கொந்தளிப்பு!
-
சென்னையில் 1980-களை நினைவுபடுத்தும் ‘VINTAGE BUS’! - மக்கள் பயன்பாட்டிற்காக 5 பேருந்துகள் அறிமுகம்!
-
“உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்!“ : பொங்கல் விழா கொண்டாட்டத்தில் முதல்வர் பேச்சு!