Sports

அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த முடிவு: இந்திய அணியை களத்தில் இறக்கிய ICC.. விவரம் என்ன ?

இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பைத் தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடக்கவுள்ளது. இந்த தொடரில் அதிகபட்சமாக 20 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. இந்த தொடரின் அட்டவணையை ஐசிசி அமைப்பு நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.

வரும் ஜூன் 1-ம் தேதி தொடங்கும் இந்த தொடர் மொத்தமாக 29 நாட்கள் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி ஜூன் 29-ம் தேதி நடைபெறவுள்ளது. ஜூன் 26 மற்றும் ஜூன் 27 ஆகிய தேதிகளில் அரையிறுதிப் போட்டியும், ஜூன் 29ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடக்கவுள்ளது.

இந்த தொடரில் இந்திய அணி தனது அனைத்து லீக் போட்டிகளையும் அமெரிக்காவில் நடக்கும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் இந்தியாவை வைத்து கிரிக்கெட்டை பிரபலப்படுத்த ஐசிசி அமைப்பு முடிவு செய்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அமெரிக்காவில் பேஸ்பால் மற்றும் கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளே பிரபலமாக இருந்து வருகிறது. அதைத் தொடர்ந்து அடுத்த இடத்தில் கால்பந்து இருக்கிறது. அங்கு கிரிக்கெட் பெரிய அளவில் விளையாடப்படும் விளையாட்டாக இல்லை. இதனால் அங்கு கிரிக்கெட் விளையாட்டை பிரபலப்படுத்தும் விதமாகவே அங்கு ஐசிசி அமைப்பு கிரிக்கெட் உலகக்கோப்பையை நடத்துகிறது.

அமெரிக்காவில் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகளவில் இருக்கிறார்கள். இதனால் அவர்களை வைத்து கிரிக்கெட் போட்டியை நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளது. அதிலும் அங்கு இந்தியாவை சேர்ந்தவர்கள் அதிகளவில் இருப்பதால் இந்தியா விளையாடும் லீக் போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவின் நியூயார்க் , புளோரிடா ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.

மேலும், முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா vs பாகிஸ்தான் மோதலும் நியூயார்க் நகரில் நடத்தப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்க கிரிக்கெட் அணியில் தென்காசியாவை சேர்ந்த வீரர்களே அதிகளவில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, அமெரிக்க மீடியாக்களும் கிரிக்கெட் உலகக்கோப்பை குறித்து செய்தி வெளியிட்டு வருகிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Also Read: "நடுவர்கள் தங்களது கண்களை திறந்து ICC -க்கு அறிக்கை அளிக்கவேண்டும்" - ரோஹித் சர்மா காட்டம் !