Sports

"நடுவர்கள் தங்களது கண்களை திறந்து ICC -க்கு அறிக்கை அளிக்கவேண்டும்" - ரோஹித் சர்மா காட்டம் !

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி சென்சூரியன் நகரில் நடைபெற்றது. இதில் மோசமாக ஆடிய இந்திய அணி மூன்றே நாளில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. விராட் கோலி, கே.எல்.ராகுல், பும்ரா மட்டுமே அணிக்கு பங்களிப்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து கேப் டவுனில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய தென்னாபிரிக்க அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 55 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. பின்னர் ஆடிய இந்திய அணி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிலும் கடைசி 6 விக்கெட்டுகளை ஒரு ரன் கூட எடுக்காமல் இழந்தது.

பின்னர் 2-வது இன்னிங்க்ஸை ஆடிய தென்னாபிரிக்க அணி 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு 78 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. கேப் டவுனில் நடைபெற்ற இரண்டாவது போட்டி, ஒன்றரை நாளில் முடிந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 642 பந்துகள் மட்டுமே வீசப்பட்டுள்ளது.இதன் மூலம் வரலாற்றில் குறைவான நேரத்தில் முடிந்த போட்டி என்னும் மோசமான சாதனையை படைத்துள்ளது.

இந்த நிலையில், ஆடுகளத்தை குறை சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "இந்தியாவின் ஆடுகளங்களை விமர்சிப்பவர்கள் தற்போதாவது தங்களது வாய்களை மூடி கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாங்கள் பதிலுக்கு பதில் பேச வேண்டிய நிலை ஏற்படும்.

உலகக்கோப்பை இறுதி போட்டிக்கான ஆடுகளம் சுமாராக இருந்ததாக ஐசிசி அறிவித்தது எனக்கு பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. அந்த ஆடுகளத்தில் ஒருவர் சதமடித்தார். பேட்ஸ்மேன்களால் சதமடிக்க முடியும் போது ஆடுகளம் மோசமாக இருந்ததாக எப்படி கூறுகிறார்கள் என்பது புரியவில்லை. போட்டி நடுவர்கள் தங்களது வேலையை சரியாக செய்ய வேண்டும். ஆடுகளத்தை கூறை கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. நடுவர்கள் தங்களது கண்களை துறந்து ஆடுகளத்தின் உண்மை தன்மையை ஆராய்ந்து அதன்பிறகு சரியான தகவலை ஐசிசியிடம் கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Also Read: "IPL தொடர் ஒலிம்பிக் தொடருக்கு நிகரான தரத்தை கொண்டுள்ளது" - முன்னாள் ஆஸ். பயிற்சியாளர் புகழாரம் !