Sports

உலகக்கோப்பை தோல்வி : "இது காதலியைப் பிரிந்துசெல்வது போன்ற வலியை கொடுக்கும்" - டு பிளிசிஸ் கருத்து !

இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது .

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் ட்ராவிஸ் ஹெட், லபுசேனேவின் ஆட்டம் காரணமாக இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.

இந்த தொடரில் இந்தியா சிறப்பாக ஆடி வந்த நிலையில், இறுதிப்போட்டியில் அடைந்த தோல்வி பல்வேறு இந்தியர்களின் இருதயத்தை நொறுக்கியது. இந்த நிலையில், இந்தியாவின் இந்த தோல்வி காதலியைப் பிரிந்துசெல்வது போன்ற வலியை கொடுத்திருக்கும் என தென்னாபிரிக்க வீரர் டு பிளிசிஸ் கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், " 2015 உலகக்கோப்பை போட்டியில் நாங்கள் தோற்றபோது இதுபோன்ற தருணங்களை நாங்கள் கடந்து சென்றோம். ஒரு கிரிக்கெட் வீரராக இந்த அனுபவத்தை நான் பெரிதும் சந்தித்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அதே வேதனையை இப்போது இந்திய வீரர்களும் அனுபவித்திருப்பார்கள். அந்த வேதனை தீர்வதற்கு இன்னும் கொஞ்சம் காலம் ஆகும். இந்த வலி காதலியைப் பிரிந்துசெல்வது போன்றது என்பதால் அதனை உடனடியாக கடந்து செல்ல முடியாது.

உண்மையில் இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய விதம் ஆச்சர்யமாக இருந்தது. அவர்களுடைய வெற்றியும் திறமையும் நம்பமுடியாததாக இருந்தது. எனினும், அவர்கள் உலகக்கோப்பையை வெல்வதற்கு சிறிது நேரம் எடுக்கும். அதற்கான காலம் அனைத்தையும் தீர்வு செய்யும்"என்று கூறியுள்ளார்.

Also Read: "25 பந்துக்கு 60 ரன் தேவை என்றாலும் அவர் இருக்கும் வரை போட்டி முடியாது"- இளம் வீரரை புகழ்ந்த ஹர்பஜன் சிங்