Sports

"25 பந்துக்கு 60 ரன் தேவை என்றாலும் அவர் இருக்கும் வரை போட்டி முடியாது"- இளம் வீரரை புகழ்ந்த ஹர்பஜன் சிங்

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டியின்போது குஜராத் டைட்டன்ஸ் அணிகு எதிரான போட்டியில் 5 பந்துகளில் 5 சிக்ஸர் விளாசிய ரிங்கு சிங் யாரும் நம்பமுடியாத இடத்தில இருந்து அணியை வெற்றிபெற வைத்தார். அதனைத் தொடர்ந்து கவனிக்கத்தக்க வீரராக மாறினார்.

அதன்பின்னரும் அந்த தொடரில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரிங்கு சிங் கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டரை தனி ஒருவனாக தாங்கி பிடித்து அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். பின்னர் நடைபெற்ற உள்நாட்டு தொடர்களிலும் உத்தரப்பிரதேச அணிக்காக சிறப்பாக செயல்பட்டார்.

இதன் காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் இடம்பிடித்தார். அந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்பட ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்து அங்கும் சிறப்பாக செயல்பட்டார்.

அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெறும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்று இறுதிக்கட்டத்தில் இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார். இந்த நிலையில், ரிங்கு சிங் அற்புதமான திறமை கொண்டவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், "ரிங்கு சிங் அற்புதமான திறமை கொண்டவர். அவரிடம் சிக்சர்கள் அடிப்பதில் நல்ல தன்னம்பிக்கை இருக்கிறது. அவரைப் போன்ற வீரர் தான் இந்தியாவுக்கு 5, 6 ஆகிய பேட்டிங் இடத்தில் தேவை. அதிரடியாக அடிக்கும் திறமையுடன் அமைதியாக இருக்கும் அவரின் பண்பும் நன்றாக இருக்கிறது. அவர் தனது அடிக்கும் திறன் மற்றும் நிதானம் ஆகியவற்றில் தோனியை ஒத்தவராக இருக்கிறார். எனவே கடைசி 25 பந்துகளில் 60 ரன்கள் தேவை என்ற சூழ்நிலையில் கூட ரிங்கு சிங் களத்தில் இருந்தால் போட்டி முடிந்து விடாது" என்று கூறியுள்ளார்.

Also Read: "தோனி 20 கிலோ குறைக்கச்சொன்னார், ஆனால் இவர் 5 கிலோ கூடிவிட்டார்" - ஆப்கான் அணி முன்னாள் கேப்டன் கிண்டல் !