Sports

இந்த மும்பை வீரருக்கு அவசரப்பட்டு வாய்ப்பு கொடுத்துவிட்டீர்கள்- இளம்வீரர் குறித்து ஸ்ரீகாந்த் கருத்து !

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சில வாரங்களுக்கு முன்னர் ஆசிய கோப்பைக்கான அட்டவணை வெளியானது. அதில், ஒன்பது ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட உள்ள நிலையில், வெறும், நான்கு ஆட்டங்கள் மட்டுமே பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது சர்சையானது.

அதனைத் தொடர்ந்து இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், திலக் வர்மாவிற்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர கே.எல் ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

மேலும், பந்துவீச்சாளர்கள் வரிசையில் குல்தீப் யாதவ், பிரசீத் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹலுக்கு அணியில் இடம்வழங்கப்படவில்லை. இதனை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

மேலும், இளம்வீரர் திலக் வர்மாவுக்கு மிகவிரைவில் இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், இப்படி திடீர் என முக்கிய தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்காமல் இருநாட்டு தொடர்களில் வாய்ப்பு அளித்து அதன்பின்னர் ஆசியக்கோப்பை மற்றும் உலகக்கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் வாய்ப்பு அளிக்கலாம் என கங்குலி உள்ளிட்ட வீரர்கள் ஆலோசனை வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில், திலக் வர்மவை உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் களமிறக்கவேண்டாம் என இந்திய அணி வீரரும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், "திலக் வர்மா நல்ல திறமையை கொண்டுள்ள நல்ல வீரர், ஆனால் எடுத்த எடுப்பிலேயே அவரை உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் களமிறக்காதீர்கள். மாறாக சில இரு தரப்பு ஒருநாள் தொடரில் விளையாட வைத்து அவரை உருவாக்குங்கள். அப்படி செய்து அவரை அடுத்த டி20 மற்றும் உலகக்கோப்பைக்கு தகுதியான வீரராக வளர விடுங்கள். இதுவே ஒரு இளம் வீரரை வளர்க்கும் திறன்"என்று கூறியுள்ளார்.

Also Read: பாலியல் குற்றவாளிக்கு தொடரும் பாஜக அரசின் ஆதரவு.. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அதிரடி தடை.. பின்னணி என்ன ?