Sports

#IPL2023.. புதிய வரலாற்றை படைக்குமா சென்னை அணி: இன்று பிளே ஆஃப் சுற்று முதல் போட்டி CSK vs GT மோதல்!

இந்தாண்டுக்கான ஐ.பி.எல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகள் முடிந்து இன்று முதல் பிளே ஆஃப் சுற்றுகள் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் மோதுகின்றன. அடுத்த போட்டியில் மும்மை - லக்னோ அணிகள் மோதுகின்றன.

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் பிளே ஆஃப் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

இதற்குக் காரணம் ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக இதுவரை சென்னை அணி ஒரு முறை கூட வெற்றி பெற்றது இல்லை. நடப்பு லீக் போட்டியில் கூட தோல்வியைச் சந்தித்து. இதனால் சொந்த மண்ணில் நடைபெறும் இன்றைய போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி புதிய வரலாற்றை சென்னை அணி படைக்கும் என்று அதன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

அதேபோல் குஜராத் அணி முதல்முறையாகச் சென்னையில் விளையாடுகிறது. இந்த அணியும் சென்னையை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இந்தத்தொடர் முழுவதும் குஜராத் அணி சிறப்பாக விளையாடியுள்ளது.

நடப்பு தொடரையும் சேர்த்து 12வது முறையாகச் சென்னை அணி பிளே ஆ ஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆகையால், சொந்த மண்ணில் நடைபெறும் தகுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டி வாய்ப்பை உறுதி செய்யும் நிலையில் சென்னை அணி உள்ளது.

இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார் என்ற உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இரண்டு அணி ரசிகர்களுக்கும் எழுந்துள்ளது. எப்படி இருந்தாலும் இன்றைய போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”இந்திய அணி பற்றி யோசிக்கவில்லை,, இப்போது செய்யப்போவது இதுதான்” - இளம் வீரர் ரிங்கு சிங் கூறியது என்ன ?