Sports
கால்பந்து கரியரில் முதல்முறை.. மெஸ்ஸியை சஸ்பெண்ட் செய்த PSG அணி.. முடிவுக்கு வருகிறதா ஒப்பந்தம் ?
நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் மிகசிறந்த கால்பந்து வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸி இடம்பெற்றுள்ளார்.
இது தவிர சில நாட்களுக்கு முன்னர் அவர் ஃபிபா அமைப்பின் இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டது. இது தவிர பாலன் டி ஓர் போன்ற உலகின் முக்கிய விருதுகள் அனைத்தையும் அவர் வென்றுள்ளார். அதிலும் குறிப்பாக பிரபல கால்பந்து கிளப்பான பார்சிலோனாவில் இணைந்து அந்த அணி பல்வேறு கோப்பைகளை குவிக்க காரணமாக இருந்தார்.
கோபா டெல் ரே,லா லிகா, சாம்பியன்ஸ் கோப்பை, கிளப் உலகக்கோப்பை என பார்சிலோனா ஆடிய அத்தனை தொடரிலும் அந்த அணிக்கு வெற்றியை தேடித்தந்துள்ளார். பார்சிலோனா-மெஸ்ஸி என்ற பந்தம் பிரிக்கவே முடியாது என்று இருந்த நிலையில், இந்த உறவில் முறிவு ஏற்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பார்சிலோனா மெஸ்ஸியுடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட நிலையில் கண்ணீரோடு அந்த கிளப்பில் இருந்து விடைபெற்றார் மெஸ்ஸி. பின்னர் பிரான்சில் பிரபல பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்(PSG ) கிளப்பில் இணைந்த அவருக்கு அங்கு அனுபவம் பெரிய அளவில் சிறப்பாகயில்லை. முதலாம் ஆண்டு அங்கு திணறிய மெஸ்ஸி, இரண்டாம் ஆண்டில் இருந்து PSG கிளப்புக்கு முக்கிய ஆட்டக்காரராக மாறியுள்ளார்.
இந்த ஆண்டு அந்த அணிக்காக அதிக கோல் பங்களிப்பு செய்தவராக மெஸ்ஸி இருந்து வருகிறார். எனினும் இந்த ஆண்டோடு அவரின் ஒப்பந்தம் முடிவுக்கு வரும்நிலையில், மெஸ்ஸி PSG அணியில் தொடருவாரா அல்லது வெளியேறுவாரா என்ற கேள்வி எழுந்தது. மேலும், அவர் தனது தாய் கிளப்பான பார்சிலோனாவில் மீண்டும் இணைவார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், மெஸ்ஸி PSG அணி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்காமல் சௌதி அரேபியாவுக்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த PSG அணி நிர்வாகம் மெஸ்ஸியை இரண்டு வாரங்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் இரண்டு போட்டிகளில் மெஸ்ஸி விளையாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்த சம்பவத்துக்கு மெஸ்ஸி வருத்தம் தெரிவித்துள்ளார்.
மெஸ்ஸியின் கால்பந்து வாழ்க்கையில் முதல் முறையாக அவர் அணி நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் அவருக்கும் அணிக்கும் இடையே பிரச்சனைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இந்த சீஸனுடன் மெஸ்ஸி PSG அணியில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!