Sports

"பும்ரா பற்றி பேசி எந்த பயனுமில்லை.. அவரை குறித்து கேள்வி கேட்கவேண்டாம்" -ரோகித் சர்மா காட்டம் !

ஐபிஎல் மும்பை அணிக்காக அறிமுகமான பும்ரா அதன்பின்னர் தனது அபார செயல்பாடு காரணமாக இந்திய அணியின் இடம்பிடித்தார். அதோடு குறுகிய காலத்தில் இந்தியாவின் முதன்மை பந்துவீச்சளராகவும் உயர்ந்தார். முதலில் அவர் லீமிடெட் போட்டிகளுக்கு மட்டுமே தகுதியான வீரர் என கூறப்பட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி அங்கும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்தார்.

தொடர்ந்து இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பும்ரா அடிக்கடி ஏற்படும் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இறுதியாக கடந்த ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரின் போது காயமடைந்த பும்ரா, தற்போது வரை அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை.

கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் இந்தியா தோல்வியைத் தழுவ அவரின் காயமும் ஒரு காரணமாக கூறப்பட்டது. அதன் பின்னர் ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பும்ரா களமிறங்கப்படுவார் என தகவல்கள் கசிந்த நிலையில், முதுகுப் பகுதியில் தொடர்ந்து பிடிப்பு இருப்பதால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பும்ரா விலகியதாக அறிவிக்கப்பட்டது.அப்போது இந்திய அணி முக்கியமான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் இடம்பெறவில்லை.

அதன் பின்னர் பும்ரா இனி நேரடியாக ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக தான் களமிறங்குவார் என தகவல் வெளியான நிலையில் ரசிகர்கர் அவர் ஐபிஎல் தொடர் என்றால்தான் ஆடுவாரா என விமர்சிக்கத்தொடங்கினர். அதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் பும்ரா விளையாட மாட்டார் என தகவல் வெளியானது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ”பும்ரா போன்ற பந்துவீச்சாளர்களை இந்திய அணி மிஸ் செய்கிறதா?” என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரோகித் சர்மா, ” இப்போது இந்திய அணியில் இருக்கும் வேகப்பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள். பும்ரா இடத்தை நிரப்புவது கடினம் என்றாலும், ஒவ்வொரு வீரர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்து வருகின்றனர்.அடுத்த எட்டு மாதங்களுக்கு பும்ரா இருக்கமாட்டார்.இனி பும்ரா பற்றி நாம் பேசி எந்த பயனுமில்லை. ஆகையால் இனிமேல் அவரைப் பற்றிய கேள்விகளை எழுப்ப வேண்டாம்” என சற்று காட்டமாக பதிலளித்துள்ளார்.

Also Read: தோனியின் கடைசி IPL தொடர் இதுவா ? -முன்னாள் CSK வீரர் ஷேன் வாட்சனின் பதில் என்ன தெரியுமா ?