Sports
சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான இந்திய மைதானங்கள் மோசமானதா ? -ஆஸ். வீரர்களின் விமர்சனத்துக்கு சச்சின் பதில்!
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி இன்று நாக்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. புகழ்பெற்ற பழமைவாய்ந்த ஆஷஸ் தொடருக்கு பின்னர் முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடராக இருப்பதால் இது கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை தக்கவைத்துக்கொண்டது. மேலும், கடைசியாக நடந்த 3 தொடர்களிலும் இந்த கோப்பையை இந்திய அணியே வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த முறை இந்த தொடரை வென்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டி வருகிறது.
இதற்காக சுழலுக்கு ஏற்ற இந்திய மைதானங்களை போலவே சிட்னியில் மைதானத்தை தயாரித்து ஆஸ்திரேலியா அணி பயிற்சியில் ஈடுபட்டது. இந்தியாவுக்கு வந்த பின்னரும் சுழல் பந்துவீச்சுக்கு தயாராகும் வகையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அதே நேரம் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய துணைக்கண்ட மைதானங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதை பல ஆண்டுகளாக விமர்சித்து வருகின்றனர்.
ஆனால், துணைக்கண்ட அணிகள் ஆஸ்திரேலியா சென்றால் அங்கு வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தை அமைத்து அவர்கள் வென்றால் இதுதான் உண்மையான டெஸ்ட் போட்டி என்று கூறுவதும் காலம் காலமாக நடந்து வருகிறது. நம் நாட்டை சேர்ந்த சில விளையாட்டு விமர்சகர்கள் கூட சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் துணைக்கண்ட மைதானங்களை விமர்சித்தே வருகின்றனர்.
இந்த நிலையில், இதுபோன்ற விமர்சனங்களுக்கு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், "நீங்கள் சர்வதேச கிரிக்கெட்வீரர் என்றால் உலகின் எந்த ஆடுகளத்திலும் விளையாட வேண்டும். இது தான் வெளிநாட்டு பயணங்களின்போது உள்ள உண்மையான சவால்கள். நாங்கள் ஆஸ்திரேலியா செல்லும்போது பந்து சுழலும் என்று நாங்கள் எதிர்பார்ப்பதில்லை.
அங்கு ஆடுகளத்தின் தன்மை சிறிய பவுன்சருடன் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். அதை எதிர்பார்த்துதான் அங்கு செல்வோம். அதேபோன்று தான் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது ஆடுகளம் சுழலுக்கு சாதகமானதாகவும், ஆடுகளம் மிகவும் மெதுவானதாக இருக்கும் என்று அவர்களுக்கு தெரியும். இது தான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!