Sports

”இந்த வீரர்கள் பட்டியலில் கில், இஷான் கிஷனின் பெயர்கள் சேராது என நம்புகிறேன்” -சுனில் கவாஸ்கர் அச்சம்!

சமீபத்தில் முடிவடைந்த வங்கதேச அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய , இஷான் கிஷன் வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் தனது அறிமுக ஒருநாள் போட்டியில் சதமடித்து அடுத்தடுத்தும் தனது அதிரடியைத் தொடர்ந்தார். இறுதியில் இரட்டை சதம் விளாசி 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்கள் குவித்தது. இதன்மூலம் இந்திய அணி 6 -வது முறையாக 400 ரன்களை தாண்டி அதிகமுறை 400 ரன்கள் குவித்த தென்னாபிரிக்க அணியின் சாதனையை சமன் செய்தது.

அடுத்ததாக களமிறங்கிய வங்கதேச அணி 182 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இஷான் கிஷனின் அதிரடியை பார்த்த முன்னாள் வீரர்கள் பலர் அவரை புகழ்ந்து தள்ளி இருந்தனர்.உலகக்கோப்பைக்கு இஷான் கிஷன் இல்லாமல் செல்லக்கூடாது என பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் அதன்பின்னர் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடியது, இதில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக கடைசி ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய இஷான் கிஷன் வெளியே அமரவைக்கப்பட்டிருந்தார். இதற்கு பல்வேறு ரசிகர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் அடுத்தடுத்த போட்டியிலும் அவர் வெளியே அமரவைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடந்த காலங்களில் அணியில் ஓரங்கட்டப்பட்ட வீரர்கள் வரிசையில் ஷுப்மான் கில் மற்றும் இஷான் கிஷனின் பெயர்கள் சேர்க்கப்படாது என நம்புகிறேன் என கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ”இன்றைய இளைஞர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பது ஒரு அற்புதமான விஷயம். அணியில் இடம் கிடைக்காதது குறித்து வீரர்கள் கவலை கொள்ள வேண்டாம். தேசிய அணியில் இருந்து நீக்கப்பட்ட வீரர்களுக்கு ஐபிஎல் களம் அமைத்துக் கொடுக்கிறது. கடந்த காலங்களில் அணியில் ஓரங்கட்டப்பட்ட ராஜேஷ் சவுகான், கருண் நாயர், லக்ஷ்மிபதி பாலாஜி, எஸ்.எஸ்.தாஸ் ஆகியோரின் வரிசையில் ஷுப்மான் கில் மற்றும் இஷான் கிஷனின் பெயர்கள் சேர்க்கப்படாது என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Also Read: "உம்ரான் மாலிக் முதலில் தனது எலும்புகள் உடையாமல் பார்த்துக்கொள்ளட்டும்" -பாகிஸ்தான் வீரர் எச்சரிக்கை!