Sports
#REALHEROES : விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்.. யோசிக்காமல் காப்பாற்றிய பஸ் டிரைவருக்கு குவியும் பாராட்டு !
இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வருபவர் இளம் வீரர் ரிஷ்ப் பண்ட். தனது அதிரடி ஆட்டத்தால் தனக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். வங்கதேசத் தொடரை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பினார். இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரிஷப் பண்ட் அவர் டெல்லியிலிருந்து உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்றுள்ளார்.
அப்போது ஹம்மத்பூர் ஜால் என்ற பகுதியில் சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்த டிவைடரில் மோதியது. இதனால் கார் உடனே தீப்பற்றி எரிந்துள்ளது. இதைப்பார்த்த அங்கிருந்த பேருந்து ஓட்டுநர் சுஷில் குமார், நடத்துநர் பரமர்ஜித் சிங் என்பவர்கள் யார் என்று தெரியாமலே உடனே அவரை காப்பாற்றினர்.
பின்னர் அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து அங்கு வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து ரிஷப் பண்டை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ரிஷப் பண்ட் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, ரிஷப் பண்டிற்கு முழங்கால் ஜவ்வு கிழிந்துவிட்டது எனவும், முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது. இதனால் அவர் முன்பு போல் விளையாட பல மாதங்கள் ஆகும் எனவும் தெரிகிறது. இத்தனை அடி பட்டாலும் ரிஷப் பண்டின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமின்றி அவருக்கு எடுக்கப்பட்ட MRI ஸ்கேனில், அவரது மூளை மற்றும் முதுகு தண்டுவடத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும் அவரது முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி தேவைப்படும் எனவும், முட்டி மற்றும் கணுக்காலில் வீக்கமும் வலியும் இருப்பதால் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ரிஷப் விபத்தில் சிக்கியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை கதி கலங்க வைத்தது. அதில் வேகமாக கார் டிவைடரில் மோதி தூக்கி விசப்படுகிறது. உடனே கார் பற்றி எரியும் காட்சி பதிவாகியுள்ளது.
மேலும் 200 மீட்டர் வரை கார் தூக்கி வீசப்பட்டதாகவும், இதில் கார் கண்ணாடியை உடைத்துக் கொண்டு ரிஷப் பண்ட் வெளியே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல் விபத்து நடந்த உடன் முதல் நபராக லாரி ஓட்டுனர் ஒருவர் தான் அங்கு வந்துள்ளார். அப்போது முகத்தில் ரத்தத்துடன் இருந்த ரிஷப் பண்ட் நான் கிரிக்கெட் வீரர் என்னைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் எனக் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் யார் என்ன என்றே தெரியாமல் ரிஷப் பண்டை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர் சுஷில் குமார், நடத்துநர் பரமர்ஜித் சிங் ஆகியோருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இவர்கள்தான் உண்மையான ஹீரோக்கள் என்று இணையவாசிகள் புகழ்ந்து தள்ளுகின்றனர்.
மேலும் இவர்கள் இருவரையும் உத்தரகண்ட் அரசு நேரில் வரவழைத்தது பாராட்டி கெளரவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!