Sports

"உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட காரணமே ஐபிஎல்-தான்" - புகழ்ந்து தள்ளிய உலகக்கோப்பை நாயகன் !

ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் -நியூஸிலாந்து அணிகள் சிட்னி மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதேபோல அடிலைட்டில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

அதைத் தொடர்ந்து இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மெல்போர்ன் மைதானத்தில் இறுதிப்போட்டியில் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி அடுத்தது விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களையே குவித்தது.

அடுத்து 138 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் முதல் ஓவரில் ஆட்டமிழந்த நிலையில்,அடுத்து வந்த சால்ட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் சிறப்பாக ஆடிய பட்லர் இறுதிவரை களத்தில் இருந்து இருந்தார். இவரின் அபார ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி இரண்டாவது முறையாக டி20 கோப்பையை வசப்படுத்தியது.

இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றிய சாம் கரன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுமட்டுமின்றி இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசிய அவர் 13 விக்கெட்களை வீழ்த்தி தொடர் நாயகன் விருதையும் தட்டி சென்றார்.

இந்த விருதை பெற்றுக்கொண்டபின்னர் பேசிய சாம் கரண் " உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டதற்கு காரணம் ஐபிஎல் தொடர்தான். அங்கு விளையாடிய அனுபவம், அங்கிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட மிகவும் உதவியாக இருந்தது.இத்தகைய பெரிய தொடர்கள், பல வீரர்களிடம் இருந்து கற்றுக்கொண்டது ஓர் அற்புதமான தருணம். ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் விளையாட வருவேன்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”இவர்கள் ஆடினால் மட்டுமே உலககோப்பையை இந்திய அணி நினைத்து பார்க்க முடியும்” -பாக். முன்னாள் வீரர் கருத்து!