Sports

"சில ஆண்டுகளில் 100 செஸ் கிராண்ட்மாஸ்டர்களை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டம்" -பிரபல பயிற்சியாளர் ட்வீட்!

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் செஸ் ஒலிம்பியாட்டின் 44-வது போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், உலகம் முழுவதும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், ஓபன் பிரிவில் இந்திய 'B' அணிக்கு வெண்கல பதக்கம் வென்றது. மேலும் உஸ்பெகிஸ்தான் அணி தங்கப் பதக்கம் வென்ற நிலையில், அர்மீனியா அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.மகளிர் பிரிவில் இந்திய 'A' அணி வெண்கலம் வென்றுள்ளது. மேலும் உக்ரைன் அணி தங்கப் பதக்கம் வென்ற நிலையில், ஜார்ஜியா அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

அதேபோல ஓபன் பிரிவில் இந்திய வீரர் நிகால் சரின் மற்றும் தமிழக வீரர் குகேஷ் ஆகியோர் தங்கம் வென்றனர். அதேபோல், ஓபன் ஆண்கள் பிரிவில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெண்கலம் வென்றார்.பெண்கள் பிரிவில் தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக், வைஷாலி ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தி அனைவருடைய பாராட்டையும் பெற்றது. சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் வென்ற இரு இந்திய அணிகளுக்கும் (ஓபன் பிரிவில் இந்தியா பி, மகளிர் பிரிவில் இந்தியா ஏ) தலா 1 கோடி ரூபாய் பரிசுத்தொகையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். மேலும் செஸ் கிராண்ட்மாஸ்டர் தகுதியை அடைந்த பிரணவுக்கு ரூ. 5 லட்சம் பரிசுத்தொகையைத் தமிழக அரசு வழங்கியது.

இந்நிலையில் பிரபல செஸ் பயிற்சியாளர் ஆர்பி ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அதில் "சில செஸ் வீரர்களையும் பயிற்சியாளர்களையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் தமிழ்நாடு அரசும் அழைத்து தமிழ்நாட்டில் செஸ் விளையாட்டை மேம்படுத்துவது குறித்து கலந்தாலோசித்தன. அடுத்த சில வருடங்களில் தமிழ்நாட்டிலிருந்து மேலும் 100 செஸ் கிராண்ட்மாஸ்டர்களை உருவாக்குவதே தமிழ்நாடு அரசின் திட்டம். எனவே அனைத்துத் தரப்பிலிருந்தும் ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படுகிறது. இது நிஜமாக வேண்டும் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

Also Read: இன்ஸ்டா மூலம் அறிமுகம்.. கணவருக்கு தெரியாமல் வளர்ந்த நட்பு.. இறுதியில் ரூ.1.63 கோடியை இழந்த அரசு ஊழியர்!