Sports

"இனி இவர்கள் எதுக்கு? டெஸ்டில் இவர்களை தூக்கி விடுங்கள்"! முன்னாள் வீரர் காட்டம்!

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான கர்சன் கவ்ரி ஒருசில இந்திய வீரர்கள் டெஸ்ட் அணியில் போதுமான வாய்ப்புகள் பெற்றுவிட்டார்கள் என்று கூறியிருக்கிறார். ஹனுமா விஹாரி, ஷர்துல் தாக்கூர், சுப்மன் கில் போன்றவர்கள் நிறைய வாய்ப்புகள் பெற்றுவிட்டார்கள் என்றும், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு இந்திய பிளேயிங் லெவனில் தங்கள் இடத்தை நிரந்தரமாக்கிக்கொள்ள அவர்கள் தவறிவிட்டார்கள் என்றும் கூறியிருகிறார் அவர்.

இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இப்படிக் கூறியிருக்கிறார் கார்வி. விஹாரி, ஷர்துல் தாக்கூர், கில் மூவரும் எட்ஜ்பாஸ்டனில் நடந்த அந்தப் போட்டியில் விளையாடியிருந்தார்கள். ஆனால், இரண்டு இன்னிங்ஸ்களிலுமே அவர்கள் சொதப்பவே செய்தார்கள். பேட்ஸ்மேன்களான கில், விஹாரி இருவரும் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறினார்கள். அதேசமயம் ஷர்துல் தாக்கூர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே ஒரு விக்கெட் தான் வீழ்த்தினார்.

"ஹனுமா விஹாரி, ஷர்துல் தாக்கூர் ஆகிய இருவரையும் தாண்டி வேறு வீரர்களை பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். சுப்மன் கில் கூட எதிர்காலத்துக்கான நல்ல வீரர் தான். ஆனால், அவர் கன்சிஸ்டென்ஸி எங்கே" எங்கே என்று கேள்வி கேட்டிருக்கிறார் காவ்ரி.

விஹாரி, கில் ஆகியோரின் இடத்தில் அவர்களுக்குப் பதில் சர்ஃபராஸ் கான், சூர்யகுமார் யாதவ் ஆகியோரை இந்திய அணி பரிசீலிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் காவ்ரி. லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவ் கடந்த சில காலமாகவே டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கக் காத்திருக்கிறார். கடந்த ஆண்டு ஒரு டெஸ்ட் தொடரில் கூட இந்திய அணியில் பேக் அப் வீரராக இடம்பெற்றிருந்தார் அவர்.

அதேசமயம் சர்ஃபராஸ் கானோ உச்சபட்ச ஃபார்மில் இருக்கிறார். தன் வாழ்நாளின் மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும் அவர், இந்த ரஞ்சி சீசனில் சதங்களாக அடித்துக் குவித்தார். "சர்ஃபராஸ் கான், சூர்யகுமார் யாதவ் இருவரும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அதற்குள் இந்திய டெஸ்ட் அணிக்குள் கொண்டுவரப்பட வேண்டும். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் அவர்கள் தான். நம் இந்திய அணிக்கு அடுத்த டெஸ்ட் தொடர் வங்கதேசத்துக்கு எதிராக நவம்பர் மாதம் வருகிறது. அந்த அணியை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நம்மிடம் இருக்கும் சிறந்த வீரர்களை அந்த அணியில் பயன்படுத்தவேண்டும்" என்று கூறியிருக்கிறார் காவ்ரி.

Also Read: பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்.. அதிரடி சட்டத்தை நிறைவேற்றிய தாய்லாந்து அரசு! காரணம் என்ன?