Sports
”சச்சின்-னுடன் பைத்தியக்காரத்தனமான முதல் சந்திப்பு”.. மனம் நெகிழ்ந்து பேசிய மும்பை அணி இளம் வீரர்!
ஐ.பி.எல் தொடரின் முன்னணி அணியான மும்பை இந்தியன்ஸுக்கு இந்த சீசன் சிறப்பாகச் செல்லவில்லை. 2022 தொடரில் மிகவும் சுமாராக விளையாடிய அந்த அணி, 10 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் பத்தாவது இடமே பெற்றது. இந்தத் தொடரில் விளையாடிய 14 போட்டிகளில், அந்த அணி 10 தோல்விகளை சந்தித்தது. இந்த சீசனில் முதல் அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்ததும் மும்பை இந்தியன்ஸ் தான். இருந்தாலும் அந்த அணியின் மிகமோசமான சீசனிலும் கூட பல நல்ல விஷயங்கள் நடந்தன. அதில் ஒன்று, இளம் வீரர் டிவால்ட் பிரெவிஸின் எழுச்சி.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணிக்காக சிறப்பாக விளையாடியதால், 2022 ஏலத்தில் அவரை வாங்கியது மும்பை. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல சிறப்பான செயல்பாடுகளைக் கொடுத்தார் பிரெவிஸ். தன்னுடைய செயல்பாடுகள் மூலம் சீனியர் வீரர்கள், ரசிகர்கள் என பலரையும் கவர்ந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் எதிர்காலத்தில் பிரெவிஸ் மிகமுக்கிய அங்கம் வகிப்பார் என்று பலரும் பாராட்டிவருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் கொடுத்த பேட்டியில், மும்பை அணியுடன் இருந்த அனுபவத்தைப் பற்றிக் கூறியிருக்கிறார் பிரெவிஸ்.
“குவாரன்டின் முடித்து ரோஹித் ஷர்மா, இஷன் கிஷன் உள்ளிட்ட மும்பை வீரர்களை சந்தித்தது மிகவும் சிறந்த தருணம். பல்லாயிரம் மக்களுக்கு முன்னால் நிகழ்ந்த என் அறிமுகமும் என்னால் மறக்க முடியாத ஒன்று. அந்த சத்தம் அதிகரிக்க அதிகரிக்க, நெருக்கடியும் அதிகமாகும். அதை நான் விரும்புகிறேன். மும்பை இந்தியன்ஸுக்கு விளையாடும் நெருக்கடி மிகவும் நல்லது. ஏனெனில், அதுதான் அந்த அணிக்கு இன்னொரு கோப்பையை வென்று தரும் உத்வேகத்தைக் கொடுக்கும்” என்று கூறியிருக்கிறார் டிவால்ட் பிரெவிஸ்.
ரோஹித், இஷன் போன்றவர்களோடு மட்டுமல்ல, ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரோடும் தன் டிரஸிங் ரூமை பகிர்ந்துகொண்டார் டிவால்ட் பிரெவிஸ். மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகரான சச்சின் டெண்டுல்கர் உடனான முதல் சந்திப்பைப் பற்றிக் கூறியிருக்கிறார் பிரெவிஸ்.
“நான் ஜிம்மின் தரையில் படுத்திருந்தபோது திடீரென சச்சின் ஜிம்முக்குள் நுழைந்தார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. முதலில் அவரோடு கைகுலுக்கினேன். அதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. நான் அவரைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன். எனக்கு அவர் கொடுத்த சின்ன சின்ன டெக்னிக்கல் விஷயங்கள் மிகவும் சிறப்பானது. சச்சின், பயிற்சியாளர் ஜெயவர்தனே போன்ற ஜாம்பவான்களிடம் இருந்து கற்றுக்கொள்வது அற்புதமான விஷயம்” என்று கூறியிருக்கிறார் டிவால்ட் பிரெவிஸ்.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!