Sports

“தசைநார் கிழிந்தும் பேட்டிங் செய்தார்” : சைமண்ட்ஸ் அஞ்சலி கூட்டத்தில் நினைவுகளை பகிர்ந்த ரிக்கி பான்டிங்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், இந்த மாதம் எதிர்பாராமல் நடந்த கார் விபத்தில் அகால மரணமடைந்தார். இரண்டு கிரிக்கெட் உலகக் கோப்பைகள் வென்றவரான சைமண்ட்ஸ் இறக்கும்போது 46 வயது. அவருடைய மரணம் கிரிக்கெட் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த 3 மாதங்களில் உயிரிழந்த மூன்றாவது முன்னணி ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ்.

இதற்கு முன் மார்ச் மாதம் ராட் மார்ஷ், ஷேன் வார்னே இருவரும் 24 மணி நேர இடைவெளியில் உயிரிழந்திருந்தனர். ஆஸ்திரேலியாவின் ஒரு ஜாம்பவானான சைமண்ட்ஸுக்கு இந்த வியாழக்கிழமை டவுன்ஸ்வில் நகரில் அஞ்சலி கூட்டம் நடந்தது. சைமண்ட்ஸ் உடன் விளையாடிய முன்னாள் வீரர்கள் ரிக்கி பான்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், டேரன் லீமன் உள்பட பலரும் இந்த அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

சைமண்ட்ஸின் கேப்டனாக பல போட்டிகளில் இருந்தவரான ரிக்கி பான்டிங், 2007 உலகக் கோப்பைக்கு தயாரிக்கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார். சைமண்ட்ஸ் ஒருமுறை தன் பைசெப்ஸில் தசைநார் கிழிந்தும் வெகு நேரம் ஒற்றைக் கையில் பேட்டிங் செய்திருக்கிறார். பான்டிங் சொல்லும்வரை அவர் வெளியேறவே இல்லையாம்.

“2007 உலகக் கோப்பைக்கு நாங்கள் புறப்படுவதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் ஒரு ஒருநாள் தொடரில் விளையாடினோம். அவர் பேட்டிங் செய்யும்போது அவர் பைசெப்ஸில் தசை நார் கிழிந்தது. ஒருசில வாரங்களிலேயே உலகக் கோப்பை தொடங்குவதாக இருந்தது. ஒற்றைக் கையில் விளையாட அவர் முயற்சி செய்துகொண்டிருந்தார். அவர் ஃபிசியோவை அழைத்து டீ ஷர்டைத் தூக்கும்போது, அவர் பைசெப்ஸ் கிழிந்து கிட்டத்தட்ட முழங்கை இருக்கும் இடத்தில் இருந்தது. அப்போது, “என் பைசெப்ஸை எப்படியாவது மேலே இழுத்து டேப் சுற்றி விடுங்கள். எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. பார்த்துக்கொள்ளலாம்” என்று ஃபிசியோவிடம் சொல்லியிருக்கிறார். பான்டிங் இதைப் பற்றிச் சொல்லியபோது அஞ்சலிக் கூட்டதில் இருந்தவர்கள் அதை நினைத்து நெகிழ்ந்திருக்கிறார்கள்.

“எங்கள் உலகக் கோப்பை திட்டங்களுக்கு அவர் எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும். அதனால், ‘முதலில் அவரை கிரவுண்டில் இருந்து வரச் சொல்லுங்கள்’ என்று கத்தினேன். அது மிகவும் முக்கியமான தருணம் என்பதால், அந்த முடிவு மிகவும் முக்கியமானது. அவர் தன்னுடைய பேட்டிங்கால் எங்களுக்கு உலகக் கோப்பை வென்று கொடுக்கக் கூடியவர் என்பதைத்தான் வரலாறு சொல்லியது. ஃபிட்னஸ் விஷயத்தில் அவருக்கு சில பிரச்னைகள் இருந்தாலும், உலகக் கோப்பைக்கு தயாரான விதம் அசாத்தியமானது” என்று கூறினார் பான்டிங்.

Also Read: மில்லர்லாம் அவ்வளவுதான்னு சொன்னாங்க.. ஆனால் அன்பும் முக்கியத்துவதும்.. ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி பேச்சு