Sports

IPL போட்டிகளை இலவசமாக பார்க்கலாம்.. விளம்பரங்கள் மூலம் வருமானம் : Star Network-க்கையே அதிரவைத்த இளைஞர்!

ஐ.பி.எல் கிரிக்கெட்டை, கட்டணமில்லாமல் பார்க்க செயலியை உருவாக்கி மோசடியில் ஈடுபட்ட சிவகங்கை வாலிபரை, ஹைதராபாத் போலிஸார் நேற்று கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், காஞ்சிரங்கால் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (29). இவர், 2021ஆம் ஆண்டு, 'டிவி'யில் ஒளிபரப்பான ஐ.பி.எல் கிரிக்கெட்டை, கட்டணமின்றி 'டிவி'யில் ஒளிபரப்பு செய்வதற்காக தனியாக செயலி ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளார்.

2018 முதல் 2022 வரை நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமையை ரூ.16,347 கோடிக்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை மோசடியாக தனியாக செயலி ஒன்றில் ஒளிபரப்பு செய்துள்ளார் ஒரு இளைஞர். தமிழகத்தைச் சேர்ந்த சில நிறுவனங்களின் விளம்பரங்களும் இந்த ஒளிபரப்பில் வெளியாகின.

தங்களுக்கு தெரியாமல், விளம்பரம் ஒளிபரப்பு செய்தது குறித்து, ஸ்டார் டிவி நிர்வாகியான ஹைதராபாத்தை சேர்ந்த கடாரம் துப்பா என்பவர், அங்குள்ள சைபர் கிரைம் போலிஸில் 2021ல் புகார் செய்தார்.

இதுதொடர்பாக எஸ்.ஐ., ரவீந்தர் தலைமையிலான போலிஸார் விசாரித்தனர். முறைகேட்டில் ஈடுபட்டது சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்காலைச் ராமமூர்த்தி என கண்டறிந்தனர்.

இதையடுத்து, நேற்று சிவகங்கை வந்த ஹைதராபாத் போலிஸார், ராமமூர்த்தியை கைது செய்து, சிவகங்கை முதலாம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் செய்து ஹைதராபாத் அழைத்துச் சென்றனர்.

Also Read: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெண்கள் IPL.. 6 அணிகள் : BCCI உறுப்பினர் சொன்ன முக்கிய தகவல் இங்கே!