Sports

ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய ரஸல்.. இரண்டாவது வெற்றியை பெற்ற கொல்கத்தா!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வென்றிருக்கிறது. கொல்கத்தாவின் சேஸிங்கின் போது சிறு தடுமாற்றம் ஏற்பட்ட சமயத்தில் ஒரே ஓவரில் ரஸல் ஆட்டத்தை கொல்கத்தா பக்கமாக திருப்பியிருந்தார். அதுதான் இந்த ஆட்டத்தின் ஹைலைட்டாக அமைந்திருந்தது.

டாஸை வென்று சேஸ் செய்யும் அணி வெல்லும் என்கிற சம்பிரதாயம் இந்த போட்டியிலும் தொடர்ந்தது. கொல்கத்தா அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயரே டாஸை வென்றார். சேசிங்கை தேர்வு செய்தார். பஞ்சாப் முதல் பேட்டிங்.

பஞ்சாப் அணி கடந்த போட்டியில் பெங்களூருவிற்கு எதிராக 200+ ஸ்கோரை சேஸ் செய்திருந்தது. ஆனால், இந்த போட்டியில் 137 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. முதலில் பேட் செய்வதால் கொல்கத்தா அணியால் எட்டவே முடியாத ஒரு அசாத்திய ஸ்கோரை எடுக்க வேண்டும் என்பதே பஞ்சாபின் நோக்கமாக இருந்தது. அதன்படியே, அதிரடியாகவும் ஆடினார். பவர்ப்ளேயில் மட்டும் 62 ரன்களை அடித்திருந்தனர். 10 ஓவர்கள் முடிவில் 85 ரன்களை அடித்திருந்தனர். ரொம்பவே நல்ல ரன்ரேட்டில் சென்று கொண்டிருந்தனர்.

ஆனால், விக்கெட்டுகளில் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டனர். எல்லா பேட்ஸ்மேன்களுமே க்ரீஸுக்குள் வந்து ஒன்றிரண்டு பவுண்டரிக்களை மட்டுமே அடித்துவிட்டு உடனே அவுட் ஆகி பெவிலியனுக்கு திரும்பினர். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. முதல் 10 ஓவர்களில் 85 ரன்களை அடித்திருந்தாலும் 5 விக்கெட்டுகளையும் இழந்திருந்தனர். இரண்டு ஓவர்களுக்கு ஒரு முறை விக்கெட்டை விட்டுக்கொண்டே இருந்தனர். இதனால், ரன்கள் கூடினாலும் ஒரு கட்டத்தில் விக்கெட் இல்லாமல் திணறினர். 102 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். கடைசியில் ரபாடா கொஞ்சம் அதிரடி காட்டவே பஞ்சாபின் ஸ்கோர் 137 ஐ எட்டியது.

கொல்கத்தா அணி சேஸிங்கை தொடங்கியது. எளிய ஸ்கோர்தான் என்றாலும் அவர்களும் விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்து ஏமாற்றமளித்தனர். முதல் 7 ஓவர்களுக்குள்ளேயே 4 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். வெங்கடேஷ் ஐயர், ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா ஆகியோர் அவுட் ஆகியிருந்தனர். ராகுல் சஹார் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்த சமயத்தில்தான் ரஸல் உள்ளே வந்தார். ஆட்டம் எந்த பக்கம் வேண்டுமானாலும் செல்லலாம் என்ற சூழலில் இருந்த போது அதை கொல்கத்தா பக்கமாக முழுமையாக திருப்பிவிட்டார். அதுவும் ஒரே ஓவரில்! ஒடேன் ஸ்மித் வீசிய 12 வது ஓவரில் மட்டும் 3 சிக்சர்களை அடித்திருந்தார்.

கூடவே ஒரு பவுண்டரியும் வந்திருந்தது. ரஸல் அடித்த அடியில் பதறிப்போய் ஒடேன் ஸ்மித் ஒரு நோ-பாலையும் வீசினார். அதை சாம் பில்லிங்ஸ் சிக்சர் ஆக்கியிருந்தார். ஆக, அந்த ஒரு ஓவரில் மட்டும் 30 ரன்கள் வந்திருந்தது. இதனால், கொல்கத்தா அணி பிரச்சனையேயின்றி 14.3 ஓவர்களில் போட்டியை வெற்றிகரமாக முடித்தது.

ரஸல் 31 பந்துகளில் 70 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 225+ ஆக இருந்தது. ஆனால், கொல்கத்தாவின் இந்த வெற்றிக்கு ரஸல் மட்டும் காரணமில்லை. ரஸலோடு ஆடிய சாம் பில்லிங்ஸும் பாராட்டப்பட வேண்டும். ஏனெனில், கொல்கத்தா டாப்-4 விக்கெட்டுகளை சீக்கிரம் இழந்த நிலையில் அதற்கு மேல் விக்கெட்டுகளை இழக்காமல் இருந்ததற்கு சாம் பில்லிங்ஸும் முக்கிய காரணமே. சாம் பில்லிங்ஸும் அதிரடியாக ஆடக்கூடியவர்.

ஆனால், ரஸல் அடித்து வெளுக்கும்போது தானும் அடிக்க நினைத்தால் விக்கெட் விழுவதற்கான வாய்ப்பு அதிகமாகும் அப்படி விழும்பட்சத்தில் அது அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து ஒரு முனையில் அதிரடியாக ஆடாமல் அடக்கி வாசித்தார். ஸ்ட்ரைக்கை மட்டும் ரொட்டேட் செய்து ரஸல் ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டே இருந்தார். ரஸலின் அதிரடியை போலவே சாம் பில்லிங்ஸ் அமைதியாக அடித்த 23 பந்துகளில் 24 ரன்கள் இன்னிங்ஸும் பாராட்டப்பட வேண்டியதே.

Also Read: உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் ரெஃப்ரியாக இந்தியப் பெண்மணி.. யார் இவர்? #5in1_Sports