Sports

மீண்டும் ஒரு உலக சாம்பியனை தோற்கடித்த பிரக்ஞானந்தா - “RCB-க்கு கேப்டன் கோலி இல்ல.. ஆனா..” #SportsUpdates

1. ஸ்மிருதி மந்தனா சாதனை!

பெண்கள் உலக கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடந்த 22வது லீக் ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேச அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு ரன்கள் 229 ரன்கள் குவித்து. அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களே எடுத்தது. இதனால்,110 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா 51 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 5,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் மிதாலி ராஜ் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் இந்த சாதனை பட்டியலில் இடம்பிடித்திருந்தனர். தற்போது ஸ்மிருதி மந்தனாவும் அப்பட்டியலில் இணைந்துள்ளார்.

2. விராட் கோலி - கேப்டனுக்கும் மேல்!

2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பு ஃபாஃப் டூ பிளஸிக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தற்போது பத்திரிகைக்குப் பேட்டிகொடுத்துள்ள இந்திய அணி முன்னாள் வீரர் இர்பான் பதான், “ஆர்சிபியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி களத்தில் ஒரு வீரராக மட்டும் இருந்துவிடுவார் என நினைக்க வேண்டாம். களத்தில் ஆலோசகர் பணியை அவர் செய்ய உள்ளார். இதுகுறித்து எனக்கு தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் அவர் மற்ற எந்த விஷயங்களிலும் தலையிட மாட்டார். குறிப்பாக திட்டம் வகுப்பது, XI அணித் தேர்வு, எதிரணியை வீழ்த்த வியூகம் போன்ற விஷயங்களில் அவர் நிச்சயம் தலையிட மாட்டார். அது கேப்டனுக்கான வேலை” எனக் கூறினார்.

3. மீண்டும் ஒரு உலக சாம்பியனை தோற்கடித்த பிரக்ஞானந்தா!

தமிழ்நாட்டை சேர்ந்த 16 வயதே ஆன செஸ் வீரர் பிரக்ஞானந்தா சமீபத்தில்தான் உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி உலகைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். தற்போது சாரிட்டி கோப்பை விரைவு செஸ் போட்டித் தொடர் ஆன்லைன் முறையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டித் தொடரின் 8வது சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 3 சீன வீரர் டிங் லிரேன் உடன் விளையாடினார். இதில் 49வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். மீண்டும் ஒரு உலக சாம்பியனை தோற்கடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் பிரக்ஞானந்தா.

4. லக்‌ஷயா சென் விலகல்!

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள பாசெல் நகரில் இன்று முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து சமீபத்தில் நடந்த ஜெர்மனி ஓபன் மற்றும் ஆல் இங்கிலாந்து போட்டியில் அடுத்தடுத்து இறுதி சுற்றுக்கு முன்னேறிய 20 வயது இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் விலகி இருக்கிறார்.

5. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு சிக்கல்!

கடந்த மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் புதிய நிறுவனமான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டை ரூ.7.5 கோடிக்கு வாங்கியது. ஆனால் மார்க் வுட் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு மாற்று வீரராக வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது விளையாட லக்னோ நிர்வாகம் விரும்பியது. இதனைத் தொடர்ந்து தஸ்கினை அனுகிய போது அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான தடையில்லாச் சான்றிதழை வழங்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது.

Also Read: சாதனை வீராங்கனையின் ஒலிம்பிக் பதக்கங்கள் பறிமுதல்... 10 ஆண்டுகளுக்குப் பிறகு சோகம்.. பின்னணி என்ன?