Sports

30 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் கிரிக்கெட்: 3 தொடர்களை நடத்தும் இந்தியா- அதிகாரப்பூர்வமாக அறிவித்த ICC

டி20 உலகக்கோப்பை நடந்து முடிந்திருக்கும் இந்த சமயத்தில் 2024 முதல் 2031 வரையிலான ஐ.சி.சி தொடர்களை நடத்தப்போகும் நாடுகளின் பட்டியலை ஐ.சி.சி அறிவித்துள்ளது. இதில் பாகிஸ்தானும் இடம்பெற்றிருப்பது, அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா நடத்தவிருக்கிறது. 2023 ஓடிஐ உலகக்கோப்பையை இந்தியா நடத்தவிருக்கிறது. இந்நிலையிலேயே 2024 முதல் 2031 வரையிலான ஐ.சி.சி தொடர்களை நடத்தவிருக்கும் நாடுகளின் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது அவை,

2024 டி20 உலகக்கோப்பை - அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்

2025 சாம்பியன்ஸ் ட்ராஃபி - பாகிஸ்தான்

2026 டி20 உலகக்கோப்பை - இந்தியா, இலங்கை

2027 ஓடிஐ உலகக்கோப்பை - தென்னாப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே

2028 டி20 உலகக்கோப்பை - ஆஸ்திரேலியா, நியுசிலாந்து

2029 சாம்பியன்ஸ் ட்ராஃபி - இந்தியா

2030 டி20 உலகக்கோப்பை - இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து

2031 ஓடிஐ உலகக்கோப்பை - இந்தியா, வங்கதேசம்

எட்டு ஆண்டுகளில் எட்டு ஐ.சி.சி தொடர்கள் நடக்கவிருக்கின்றன. 2026, 2029, 2031 ஆகிய ஆண்டுகளில் நடைபெறும் தொடர்களை இந்தியா நடத்தவிருக்கிறது.

இந்தப் பட்டியலில் அனைவருக்கும் ஆச்சர்யமாக இருக்கும் விஷயம் பாகிஸ்தானே. 2025 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி சாம்பியன்ஸ் ட்ராஃபியை பாகிஸ்தான் நடத்தவிருக்கிறது.

கடைசியாக 1996 ஆம் ஆண்டில் இந்தியா இலங்கையுடன் சேர்ந்து பாகிஸ்தானும் உலகக்கோப்பை தொடரை நடத்தியிருந்தது. அதன்பிறகு, எந்த ஐ.சி.சி தொடரையும் பாகிஸ்தான் நடத்தவில்லை. தீவிரவாத தாக்குதல்கள், பாதுகாப்பின்மை என மற்ற நாட்டு வீரர்கள் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் ஆடச் செல்லவே அஞ்சினர். பாகிஸ்தானிலும் அதற்கேற்றவாறு சம்பவங்கள் அரங்கேறின.

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் ஆடச் சென்ற இலங்கை வீரர்களின் பேருந்து மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதன்பிறகே உலக கிரிக்கெட்டிலிருந்து பாகிஸ்தான் மட்டும் தனியாக துண்டிக்கப்பட்டது. எந்த நாடும் அங்கே சென்று கிரிக்கெட் ஆட விரும்பவில்லை. மும்பை தாக்குதல்கள் மற்றும் அரசியலினால் இந்தியாவும் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் ஆடச் செல்வதை தவிர்த்தது.

2008 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை பாகிஸ்தானே நடத்துவதாக இருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக பின்னர் இடம் மாற்றப்பட்டது. 2011 உலகக்கோப்பையையும் இந்தியா இலங்கையுடன் சேர்த்து பாகிஸ்தானும் நடத்துவதாக இருந்தது. கடைசி நேரத்தில் அதுவும் மாற்றப்பட்டது.

பாதுகாப்பின்மை என்கிற குற்றச்சாட்டு பாகிஸ்தான் மீது இப்போது வரை தொடரவே செய்கிறது. சமீபத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நியுசிலாந்தும், இங்கிலாந்தும் பாதுகாப்பின்மையை காரணம் காட்டி பாகிஸ்தான் தொடரை ரத்து செய்திருந்தனர்.

இந்நிலையில்தான் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை முழுக்க முழுக்க பாகிஸ்தான் மட்டுமே நடத்தும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் ஒரு ஐ.சி.சி தொடரை நடத்தவிருக்கிறது. இது மிகப்பெரிய பெருமை என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் சேர்மன் ரமீஷ் ராஜா தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடியே 2025 இல் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் ட்ராஃபி நடைபெறுமா என்பதை அப்போதைய உலக அரசியலும் வீரர்களின் மனநிலையுமே முடிவு செய்யும்.

Also Read: T20 WC: பழி தீர்த்த நியுசிலாந்து.... அரையிறுதியில் நெருங்கி வந்து தோற்ற இங்கிலாந்து!