Sports

T20 உலகக்கோப்பை: முஜிபுர் ரஹ்மான்- ரஷீத்கான் சுழலில் சிக்கி சின்னாபின்னமான ஸ்காட்லாந்து! AFG vs SCO

உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் க்ரூப் பி யை சேர்ந்த ஆஃப்கானிஸ்தான் அணியும் ஸ்காட்லாந்து அணியும் மோதியிருந்தன. இதில், ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது.

இந்த போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்திருந்த ஐ.பி.எல் சீசனில் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற போட்டிகள் அனைத்துமே குறைவான ஸ்கோரை எடுக்கக்கூடிய போட்டிகளாகவே இருந்தது. பேட்ஸ்மேன்கள் ஒரு சிக்சரை அடிப்பதற்கு கூட திணறியிருந்தனர். இந்த மைதானத்தின் ஆவரேஜ் ஸ்கோரே 137 ஆகத்தான் இருந்தது.

ஆனால், இப்போது உலகக்கோப்பையில் ஷார்ஜா மைதானத்தின் பிட்ச் மீண்டும் பழைய நிலைக்கு மாறியிருப்பதை போல் இருக்கிறது. இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான போட்டியில் வங்கதேச அணி 170+ ஸ்கோரை அடிக்க இலங்கை அணி அதை வெற்றிகரமாக சேஸ் செய்திருந்தது.

ஆஃப்கானிஸ்தான் Vs ஸ்காட்லாந்து நேற்றைய போட்டியிலும் ஆஃப்கானிஸ்தான் முதலில் பேட் செய்து அதிரடியாக 190 ரன்களை குவித்தது. ஓப்பனிங் இறங்கிய ஹஷ்ரத்துல்லா சேஷாய், முகமது சேஷாத் இருவரும் பவர்ப்ளேயை முழுமையாக பயன்படுத்தி வெளுத்தெடுத்தனர். பவர்ப்ளேக்குள்ளாக மட்டும் இந்த கூட்டணி 54 ரன்களை சேர்த்திருந்தது. சேஷாத் 15 பந்துகளில் 22 ரன்களிலும் சேஷாய் 30 பந்துகளில் 44 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இவர்கள் அமைத்துக் கொடுத்த அதிரடியான அடித்தளத்தை ரஹ்மானுல்லாவும் நஜிபுல்லா ஷத்ரானும் மிகச்சிறப்பாக பயன்படுத்தி ஸ்கோரை தொடர்ந்து உயர்த்தினர். இந்த கூட்டணி தொடக்கத்தில் மெதுவாக நின்று செட்டில் ஆகி அதன்பின் தங்கள் வேலையை காட்ட தொடங்கியது.

கடைசி 5 ஓவர்களில் மட்டும் 63 ரன்கள் வந்திருந்தது. ரஹ்மானுல்லா 44 ரன்களில் டேவேயின் பந்தில் அவுட் ஆக, நஜிபுல்லா அரைசதம் அடித்து 59 ரன்களில் ஷரீஃபின் ஓவரில் இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

ஸ்காட்லாந்து அணிக்கு டார்கெட் 191. ஆஃப்கானிஸ்தானை போலவே ஸ்காட்லாந்தும் கொஞ்சம் நன்றாகவே தொடங்கியது. முதல் 3 ஓவர்களில் மட்டும் 27 ரன்களை சேர்த்திருந்தது. ஓப்பனர்கள் முன்ஸியும் கோட்சரும் நன்றாக தொடங்கியிருந்தனர். ஆனால், நான்காவது ஓவரிலிருந்து ஆட்டம் மாற தொடங்கியது. முஜீபுர் ரஹ்மான் வீசிய அந்த ஓவரில் மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார். ஓப்பனர் கோட்சர், மெக்லாய்டு, பெர்ரிங்டன் என மூன்று பேரையும் ஒரே ஓவரில் போல்ட் மற்றும் lbw ஆக்கினார்.

இளம் சுழற்பந்து வீச்சாளரான முஜிப் ஆஃப் ஸ்பின்னராக அறியப்பட்டவர். நேற்றைய போட்டியில் வலக்கை பேட்ஸ்மேன்களுக்கு லெக் ஸ்பின்னர்களை போல மணிக்கட்டை பயன்படுத்தி கூக்ளியையும் இடக்கை பேட்ஸ்மேன்களுக்கு ஆஃப் ஸ்பின்னர்களை போல விரலை பயன்படுத்தியும் வீசினார். இந்த வித்தியாசமான பந்துவீச்சால் எந்த மாதிரியான பந்தை எதிர்கொள்ளப்போகிறோம் என தெரியுமால் பேட்ஸ்மேன்கள் தடுமாறி போயினர். தொடர்ந்து விக்கெட் வேட்டை நடத்திய முஜிப் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இவருக்கு உறுதுணையாக ஆஃப்கன் அணியின் நட்சத்திர வீரரான ரஷீத்கானும் தனது கூக்ளிக்களால் பேட்ஸ்மேன்களை திணறடித்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருவரின் சுழலிலும் சிக்கி சின்னாபின்னமான ஸ்காட்லாந்து அணி 60 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. ஆஃப்கன் அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

டி20 போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் அணி அபார வளர்ச்சியை பெற்றுள்ளது. ஐ.பி.எல் போன்று உலகம் முழுவதும் நடக்கும் ப்ரீமியர் லீக் போட்டிகள் அத்தனையிலும் ஆஃப்கன் வீரர்கள் பங்கேற்கின்றனர். அங்கிருந்து கிடைக்கப்பெறும் அனுபவத்தை ஆஃப்கன் அணிக்காக கச்சிதமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்தியா, பாகிஸ்தான் அணிகளை முந்தி அதிக ரன்ரேட்டோடு க்ரூப் பி யில் ஆஃப்கன் அணி முதலிடத்தில் இருக்கிறது.

Also Read: ”நான் சில ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவை பற்றி சொல்கிறேன்” - ஷமிக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபலங்கள்!