Sports

ஐ.பி.எல் தொடருக்குப் பிறகு திரைத்துறையில் களமிறங்கும் தோனி : உறுதி செய்த சாக்‌ஷி!

இந்திய அணியின் கேப்டனாக இருந்து உலகக் கோப்பையை வென்று கொடுத்த தோனி, கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இனி தோனி இந்திய அணியின் ஜெர்ஸி அணிந்து விளையாடுவதை பார்க்க முடியாதே என அவரது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது தோனியின் பக்கம் இருந்து புதிய அறிவிப்பு வந்துள்ளது அவரது ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது.

கடந்த வருடம் சினிமா துறையில் முதன்முதலில் களமிறங்கிய தோனி அவரது சினிமா தயாரிப்பு நிறுவனமான ‘தோனி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தை ஆரம்பித்து திரைத்துறைக்குள் நுழைந்தார். மேலும் அந்த நிறுவனத்தின் சார்பாக “ரோர் ஆஃப் தி லயன்” என்ற ஆவண பட தொடரை தயாரித்தார்.

தற்போது தேனியின் மனைவிவும் தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் சாக்‌ஷி தோனி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது இந்த நிறுவனம் சார்பாக ஒரு வெப் சீரிஸை தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

ஒரு அறிமுக எழுத்தாளரின் அறிவியல் புனைகதை புத்தகத்தை வெப் சீரிஸாக எடுக்கப்போவதாகவும் இந்தக் கதை ஒரு மர்மமான அகோரியின் பயணத்தை ஆராய்கிறது என்றும் அந்த அகோரி வெளிப்படுத்திய ரகசியங்கள் பண்டைய புராணங்களையும், தற்போதுள்ள நம்பிக்கையையும், எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் விளைவுகளையும் மாற்றக்கூடியதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, “நாங்கள் இந்த கதையையும், கதை மாந்தர்களையும் இந்த உலகத்தில் உள்ள அனைத்து பக்கங்களிலுமிருந்து கச்சிதமாகத் திரைக்குக் கொண்டு வர விரும்புகிறோம். இந்தக் கதையை திரைப்படமாக எடுப்பதைவிட வெப் சீரிஸாக எடுப்பதுதான் சிறப்பாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

தோனி தயாரிக்கும் இந்த சயின்ஸ் பிக்ஷன் படம் அமேசான், நெட்ப்ளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் வெளியாக வாய்ப்புள்ளது.

Also Read: 'வலிமை' கதை தொடர்பாக இயக்குநருக்கு நடிகர் அஜித் சொன்ன யோசனை!