Sports

இந்திய வீரர்களிலேயே இந்தப் பெருமை ரோஹித் சர்மாவுக்கு மட்டும்தான்... #INDvsSA போட்டியில் அசத்திய ரோஹித்!

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ரோஹித் சர்மா அசத்தல் சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 T20 , 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் T20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா, மயான்க் அகர்வால் ஆகியோர் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை விளாசித் தள்ளினர். அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா அடித்த நான்காவது சதம் இதுவாகும்.

ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கு மட்டுமே ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கி வந்தார். கடந்த தென் ஆப்பிரிக்க தொடருக்குப் பின் ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் ரோஹித் சர்மா டக் அவுட் ஆனதால் ரசிகர்களே கொஞ்சம் அதிருப்தி அடைந்தனர். ஆனால், இந்த ஆட்டத்தில் அனைவரது கணிப்புகளையும் உடைத்து சிறப்பாக விளையாடியுள்ளார் ரோஹித்.

மேலும், இந்த சதத்தின் மூலம் ஒரு மகத்தான சாதனையையும் நிகழ்த்தியுள்ளார் ரோஹித் சர்மா. மூன்று வகையான ஆட்டங்களிலும் சதம் அடித்த ஒரே இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன் எனும் சாதனைக்குச் சொந்தக்காரராகி இருக்கிறார் ரோஹித்.

இந்த ஆட்டத்தில் ரோஹித் 174 பந்துகளுக்கு 115 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மாயன்க் அகர்வால் 183 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

இந்திய அணி 59.1 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 201 ரன்கள் எடுத்த நிலையில், மழை காரணமாக முன்னதாகவே, தேநீர் இடைவேளைக்கு நடுவர்கள் உத்தரவிட்டனர்.