Sports

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: இந்திய இளம் வீராங்கனை தங்கம் வென்று சாதனை!

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவு 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது.

இறுதிச்சுற்றுக்கு மொத்தம் 8 வீராங்கனைகள் தகுதி பெற்றதில் இந்தியா சார்பாக, அஞ்சும் முட்கில், இளவேனில் வளரிவான் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். ஆரம்பம் முதலே மற்ற நாட்டு வீராங்கனைகளுக்கு கடும் சவாலாக இலக்கை நோக்கி குறிவைத்தார் 20 வயதே ஆன தமிழகத்தின் இளவேனில் வளரிவான்.

9 சுற்றுகளின் முடிவில் மொத்தம் 251. 7 புள்ளிகளை பெற்று தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கப்பதக்கத்தை உச்சி முகர்ந்தார். ரியோ டி ஜெனிரோ உலகக்கோப்பை தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கம் இது என்பது கூடுதல் சிறப்பு.

இதன்மூலம், உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதலில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்ற 3வது இந்தியர் என்ற சாதனையையும் இவர் படைத்தார். முன்னதாக, உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதலில் அபுர்வி சண்டேலா மற்றும் அஞ்சலி பகவத் ஆகியோர் மட்டுமே மகளிரில் தங்கம் வென்றிருந்தனர்.

20 வயதே ஆன தமிழகத்தின் இளவேனில் வளரிவான் 2018 ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதலில் தங்கம் வென்றிருந்தார்.

சீனியர் பிரிவில் பங்கேற்ற முதல் சர்வதேச தொடரிலேயே தங்கம் வென்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் இளவேனில். இந்த இளம் வீராங்கனைக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.